சென்னை: “சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1.80 லட்சம் தெருநாய்கள் உள்ளன. இவற்றுக்கு ரூ.3 கோடி செலவில் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்துதல் பணி வருகின்ற ஜூன் மாதம் முதல் தீவிரமாக மேற்கொள்ளப்படவுள்ளது.” என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், தெருநாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சைகள், செல்லப் பிராணிகள் பதிவு, சிகிச்சை உள்பட பல்வேறு நடவடிக்கைகளையும் மாநகராட்சி விளக்கியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அளிக்கும் புகாரின் அடிப்படையிலும், நாய்கள் தொல்லை அதிகம் உள்ள இடங்களிலும் தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, நாய்கள் இனக்கட்டுப்பாட்டு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் அவற்றிற்கு இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மற்றும் தெருநாய்கள் மூலம் வெறிநாய்க்கடி நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.