சென்னைக்கு விஜயம் செய்த சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள்

2 hours ago 2

மனிதகுலம் தழைத்தோங்கவும், உயிர்கள் அனைத்தும் சத்தியத்தை அறிந்து முக்தியடையவும் எண்ணற்ற மகான்கள் இந்த பூமியில் அவதரித்தபடி இருந்தனர். அதில் மிகவும் முக்கியமானவர் ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதர் ஆவார். அவரால் நிர்மாணம் செய்யப்பட்டதே அத்வைத மார்க்கமாகும். அத்வைதம் சம்மந்தமான அனைத்து நூல்களையும் இயற்றினார். பாரத தேசத்திலுள்ள தலங்கள் தோறும் பயணித்து ஸ்ரீ சக்ரம், மகா மேரு என்று பிரதிஷ்டை செய்தார். அம்பிகை மீதும், ஈஸ்வரனின் மீதும் எண்ணற்ற துதி நூல்களை இயற்றி பக்தியை தழைக்கச் செய்தார். அதுமட்டுமல்லாது அத்வைத வேதாந்தத்தை மக்களிடையே பரப்புவதற்காக பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் நான்கு பீடங்களை நிறுவினார். அதற்கான மாபெரும் சிஷ்ய பரம்பரையை தோற்றுவித்தார். அவர்களையே பீடாதிபதிகளாக நியமித்தார்.

மஹான் ஸ்ரீ பத்மபதாச்சாரியார் – கிழக்கு – கோவர்தன பீடம், புரி.
மஹான் ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியார் – தெற்கு – சாரதா பீடம், சிருங்கேரி.
மஹான் ஸ்ரீ ஹஸ்தாமலகாச்சாரியார் – மேற்கு – துவாரகா பீடம், துவாரகை.
மஹான் ஸ்ரீ தோடகாச்சாரியார் – வடக்கு – ஜோஷி மடம், பத்ரிநாத்.

இதில், சிருங்கேரி சாரதா பீடம் மிகவும் பிரசித்தி பெற்றது. கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்ரா ஆற்றங்கரையை ஒட்டி இது அமைந்துள்ளது. ஆதிசங்கரரால், கி.பி. 8-ஆம் நூற்றாண்டில், அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம் என்றும் கூறப்படுகிறது. சிருங்கேரி மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஸ்வராச்சாரியார் எனும் சீடரை நியமித்தார். அதன் பின்னர் பல மஹான்கள், குறிப்பாக ஸ்ரீ சச்சிதானந்த சிவாபினவ நரசிம்ம பாரதி சுவாமிகள், ஸ்ரீ சந்திரசேகர பாரதி சுவாமிகள், ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த சுவாமிகள் போன்றோர் சாரதா பீடத்தை அலங்கரித்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள்.இவர்கள் வழியில், தற்போதைய சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹாசுவாமிகளும், 2015-ஆம் ஆண்டில், அடுத்த சிருங்கேரி மடாதிபதியாக அறிவிக்கப்பட்ட “ஸ்ரீ விதுசேகர பாரதி மஹாசுவாமிகள்’’ தற்போது சென்னைக்கு விஜயம் மேற்கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள்.

குருவின் அன்பைப் பெற சீடர்

ஸ்ரீ விதுசேகர பாரதி மஹா சுவாமிகள், பக்தர்களின் குறைகளை கேட்டறிந்து, அதைப் பூர்த்தி செய்ய, “திக் விஜய யாத்திரை’’ தொடங்க எண்ணினார். தனது குருவான ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகளிடத்தில் அனுமதி பெற கேட்டிருக்கிறார்.

அதனைக் கேட்ட சுவாமிகளோ, “எத்தனை நாட்கள்’’? என்று கேட்டிருக்கிறார்.“சுமார் ஒரு இரண்டு மாதங்கள் ஆகும்’’ என்று ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் தெரிவித்தார். “அத்தனை நாட்களெல்லாம் முடியாது. முப்பது நாட்களில் வந்து விடவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். குருவின் பேச்சை தட்டாத சீடர் நம் விதுசேகர பாரதி ஸ்வாமிகள். ஆகையால், குரு கேட்ட மாத்திரத்தில் சரி என்று ஒப்புக் கொண்டு விட்டார். ஆனால், சிறிய தயக்கம். நம் திக் விஜய யாத்திரைக்கு ஒரு மாதம் போதுமா? என்று மீண்டும், குருவிடம் சென்று, “ஸ்வாமி… எனது யாத்திரை பயணத்திற்கு ஒரு மாதம் போதாது. ஆகையால், தாங்கள் எனக்கு 40 நாட்கள் தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதன்படி, திக் விஜய யாத்திரைக்கு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகளை அனுமதித்திருக்கிறார், ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள்.இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். தனது சீடரான விதுசேகர பாரதி சுவாமிகள் மீது அளவற்ற அன்பை வைத்திருந்த காரணத்தால்தான், மிகக் குறைந்த நாட்களே திக் விஜயம் செய்ய அனுமதித்திருக்கிறார். அதேபோல், குருவின் வாக்கே வேத வாக்காக எடுத்துக் கொண்டு, குருவின் சொல்லை தட்டாது அதை புரிந்து கொண்டும் கேட்டு அனுமதி பெற்றிருக்கிறார். இதை சுவாமிகளின் பக்தர் ஒருவர் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

17 நாட்கள் சென்னை விஜயம்

சுமார் 17 நாட்கள் வரை, ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை சந்தித்து, அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து, இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் சந்திக்கக்கூடிய மனஅழுத்த பிரச்னைகளில் இருந்து விடுபட, ஆன்மிகமே எளிய மருந்து அதுவே தீர்வு என்றும் திருவாய் மலர்ந்தார்.

மீனாட்சி கல்லூரி விஜயம்

மீனாட்சி கல்லூரி வளாகத்தில் இருக்கக்கூடிய “சாரதாம்பாள் கோயில்’’ கும்பாபிஷேகத்தை 2012-ஆம் ஆண்டில், ஜகத் குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் அவர்களின் திருக்கரங்களினால் நடைபெற்றது. 2024-ஆம் ஆண்டு அதாவது, 12 வருடங்கள் கழித்து மீண்டும் இந்த ஆண்டு கும்பாபிஷேகத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர், கல்லூரி நிர்வாகிகள். திட்டமிட்டபடி சாரதாம்பாள் கோயில் திருப்பணிகள் படுஜோராக நடைபெற்று வந்தன. இதனிடையே, ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள் சென்னைக்கு விஜயம் செய்வதை அறிந்த நிர்வாகிகள், சுவாமிகளை அழைத்து, அவர்களின் திருக்கரங்களினாலேயே கும்பாபிஷேகத்தை நடத்த முடிவெடுத்தனர். அழைப்பை ஏற்று, ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள் மீனாட்சி கல்லூரிக்கு விஜயம் செய்தார்.

பிரம்மாண்ட வரவேற்பு

சாரதாம்பாள் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த, ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள் கடந்த 12.11.2024 அன்று மாலை, மீனாட்சி கல்லூரிக்கு வருகை புரிந்தார். அவருக்கு பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு வழங்கப்பட்டது. சீடர்கள் சூழ, சுவாமிகள் மாலை ஆறு மணி அளவில், வருகை புரிந்தார். வேத விற்பன்னர்கள் வேதம் முழங்க சுவாமிகளுக்கு குரு வந்தனம் செய்தார்கள். மேலும், அவர்கள் அனைவரும் கூடைகூடையாக சுவாமிகளுக்கு பலவகை பழங்களை சமர்ப்பணம் செய்தார்கள்.

பிரார்த்தனா கீதம்

பக்தர்கள் அனைவரும் பக்திப் பாடல்களை பாடினார்கள். அதனைத் தொடர்ந்து மீனாட்சி கல்லூரியின் மாணவிகளும் பக்திப் பாடல்களை பாடி பரவசத்தில் ஆழ்த்தினார்கள். மேலும், கல்லூரி மாணவிகளும், ஆசிரியைகளும் சுவாமிகளுக்கு எண்ணில் அடங்காத பலவகை பழங்களை சமர்ப்பணம் செய்தார்கள். அதன் பின்னர்; “ஸ்வகதா பத்ரிகா’’ என்கின்ற தலைப்பில், ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகளை பற்றி சமஸ்கிருதத்தில் பேராசிரியர் டாக்டர். மீனாட்சி லட்சுமணன், ஆங்கிலத்தில் கல்லூரி நிர்வாகி கே.எஸ்.லட்சுமி அவர்களும் உரையாற்றினார்கள். சுவாமிகளுக்கு வரவேற்புரை அளிக்கப்பட்டவுடன், அருள்மழை என்கிற புத்தகத்தை வெளியிட்டார்கள்.

திருவாக்கு

“பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில், தர்மத்திற்கு கலங்கம் ஏற்படுகின்றபோதெல்லாம், நானே அவதாரம் செய்து, தர்மத்தை நிலைநாட்டுவேன் என்று கூறியிருக்கிறார். அதன்படி பல அவதாரங்களை எடுத்து, பல அசுரர்களை வதம் செய்து, தர்மத்தை காத்து அருளியிருக்கிறார், பகவான். அதேபோல், இந்த கலியுகத்தில் ஆதிசங்கரர் ரூபத்தில் அவதாரம் எடுத்து, தர்மத்தை நிலைநாட்டியிருக்கிறார். கலியுகத்தில் ஸ்ரீ ஆதிசங்கரர் ரூபத்தில் அவதாரம் எடுத்து, முன்புபோல் யாரையாவது வதம் செய்தாரா? என்று கேட்டால், இல்லை… யாரையும் வதம் செய்யவில்லை. ஆனால், நம் மனதிற்குள் இருக்கும் “அஞ்ஞானம்” என்கிற அசுரனை சம்ஹாரம் (வதம்) செய்திருக்கிறார்.

ஆம்! நம் கண்களுக்கும், மனதினால் காண முடியாத, புரிந்துகொள்ள முடியாத “அஞ்ஞானத்தை\” போக்க வேண்டும். அதற்காக, மென்மையான ஒரு தத்துவத்தை உபதேசம் செய்ய வேண்டும் என்று எண்ணினார், ஆதிசங்கரர். அதற்காகவே அத்வைத வேதாந்த தத்துவத்தை உபதேசம் செய்திருக்கிறார். அதை நாம் நன்கு ஆழமாக புரிந்துகொண்டு பின்பற்றினால், நிச்சயம் நம்மிடையே உள்ள அறியாமை என்கிற அஞ்ஞானம் அழிந்து போகும். ஞானம் பிறக்கும். இதையே மகான்கள் மோட்சம் என்கிறார்கள். இதற்குப் பிறகு ஒரு துன்பமும் இல்லை என்று சுவாமிகள் கூடியிருந்த பக்தர்களுக்கு உபதேசித்தார்.

சாரதாம்பாள் கோயில் கும்பாபிஷேகம்:

கடந்த 13.11.2024 அன்று காலை 8 மணி அளவில், வேத மந்திரங்கள் முழங்க, வேத விற்பன்னர்களால் விசேஷ ஹோமங்கள் நடைபெற்றன. மிகச்சரியாக, காலை 10.30 மணிக்கு ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள், சாரதாம்பாள் கோயிலுக்கு வருகை புரிந்தார். முதலில், விநாயகருக்கு அபிஷேகமும் அலங்காரமும் சுவாமிகளின் திருக்கரங்களினால் நடைபெற்றன. அதன் பின்பு சாரதாம்பாளுக்கும், அருகில் இருக்கும் வெங்கடாஜலபதிக்கும் அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. 11.30 மணி அளவில், ஸ்ரீ விதுசேகர பாரதி ஸ்வாமிகள், சாரதாம்பாள் குடிகொண்டுள்ள கோபுரத்தின் மீது ஏறி கும்பாபிஷேகம் செய்ய ஆயத்தமானார். அதேபோல், விநாயகர் மற்றும் வெங்கடாஜலபதியின் கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்ய வேத விற்பன்னர்கள் தயார் நிலையில் இருந்தனர். வேதமந்திரங்களும், வாத்திய இசைகளும் ஒலிக்க, 11.50 அளவில், சாரதாம்பாள் இரு கோயிலின் கும்பாபிஷேகத்தையும் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகளின் திருக்கரங்களினால் இனிதே நடைபெற்றன. இதனைக் காண இருகண்கள் போதாது! குருவையும் தெய்வத்தையும் இப்படி ஒரே நேரத்தில் தரிசிக்க எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டுமென்று பக்தர்கள் பேரானந்தம் அடைந்தனர்

The post சென்னைக்கு விஜயம் செய்த சிருங்கேரி ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் appeared first on Dinakaran.

Read Entire Article