சென்னைக்கு கடத்த முயன்று பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் மணிகள், பண்டைய கால பாத்திரங்கள் தாசில்தாரிடம் ஒப்படைப்பு

3 months ago 17

நிலக்கோட்டை : வத்தலக்குண்டு லாட்ஜ் உரிமையாளர் வீட்டில் கைப்பற்றிய கோயில் ஐம்பொன் மணிகள், பண்டைய கால பாத்திரங்களை வனத்துறையினர் நிலக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பைபாஸ் சாலை காட்டு பகுதியில் உள்ள பிரபல லாட்ஜ் உரிமையாளர் சந்திரன் (55) பங்களாவில் விலையுயர்ந்த கருங்காலி மரக்கட்டைகள், ஐம்பொன் கோயில் மணிகள், பண்டைய கால பாத்திரங்களை விற்பனை மையமாக வைத்து கடத்தி வருவதாக மாநில (சென்னை) வனத்துறை பறக்கும் படையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையினர் கடந்த அக். 13ம் தேதி அதிகாலை அந்த பங்களாவை சுற்றி வளைத்து சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னைக்கு கடத்துவதற்காக பங்களாவில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கருங்காலி மரக்கட்டைகள், கோயில் ஐம்பொன் மணிகள், பண்டைய கால பாத்திரங்களை கைப்பற்றினர். அப்போது தப்பியோட முயன்ற தேனி மாவட்டம், போடியை சேர்ந்த யோகேஷ் குமார் (36), சந்திரனின் கார் டிரைவர் சிவராஜ் (30) ஆகியோரை பிடித்து போடி வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்,விசாரணையில் இவர்கள் பல ஆண்டுகளாக தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வெட்டப்படும் கருங்காலி உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் மற்றும் பண்டைய கால பொருட்களை வத்தலக்குண்டுவில் உள்ள சந்திரனின் வீட்டில் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து வனத்துறையினர் கருங்காலி மரக்கட்டைகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவல்படி போடி குரங்கணியை சேர்ந்த கருப்பசாமி (50), கொட்டகுடியை சேர்ந்த பால்பாண்டி (53), வத்தலக்குண்டுவை சேர்ந்த சங்கிலிமுத்து (59), கலைச்செல்வன் (32) ஆகியோரையும் கைது செய்தனர்.

இதற்கிடையே இவர்களிடமிருந்து கைபற்றப்பட்ட விலை உயர்ந்த கோயில் ஐம்பொன் மணிகள், பண்டைய கால பாத்திரங்கள் ஆகிவற்றை நேற்று வனத்துறை அதிகாரிகள் ராம்குமார், சுரேஷ் தலைமையிலான குழுவினர் நிலக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தார் அபிராமியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருங்காலி மரக்கட்டைகள் ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

போடி: குரங்கணியில் இருந்து சென்னைக்கு கடத்த முயன்று பறிமுதல் செய்யப்பட்ட கருங்காலி மரக்கட்டைகளை போடி வனத்துறையினர் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதியிலிருந்து கேரள பதிவெண் கொண்ட வாகனத்தில் 300 கிலோ கருங்காலி மரக்கட்டைகளை மறைத்து சிலர் சென்னைக்கு கடத்த முயன்று சிக்கினர். பறிமுதல் செய்யப்பட்ட கருங்காலி மரக்கட்டைகளின் தன்மையை உறுதி செய்வதற்காக அவற்றை ஆய்வக பரிசோதனைக்கு ேநற்று சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “பறிமுதல் செய்யப்பட்ட கருங்காலி கட்டைகளின் அசல் தன்மையை உறுதி செய்வதற்காக சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன்முடிவில் கிடைக்கும் அறிக்கையின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்டவை ஒரிஜினல் கருங்காலி ரகம் தானா அல்லது மோசடி செய்வதற்காக வேறு ரகங்களை கருங்காலி போல் மாற்றி கொண்டு செல்லப்பட்டதா எனத் தெரியவரும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’’ என்றனர்.

The post சென்னைக்கு கடத்த முயன்று பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் மணிகள், பண்டைய கால பாத்திரங்கள் தாசில்தாரிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article