சென்னை: சென்னை வேளச்சேரி ஏரி பகுதியில் ஆக்கிரமிப்பு எனக்கூறி 955 வீடுகளை அகற்ற கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதை கண்டித்து அப்பகுதி பெண்கள் குடும்பத்துடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உள்ள முக்கியமான ஏரிகளில் ஒன்றான வேளச்சேரி ஏரி மோசமான நிலையில் உள்ளதால், அதன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலையை மேம்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வேளச்சேரி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஜெகநாதபுரம், சசிநகர், லட்சுமிநகரில் அமைந்துள்ள 955 வீடுகளை அகற்ற தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நீர்வளத்துறை, வருவாய்த்துறை, மாநகராட்சி அதிகாரிகள் முன்னெடுப்புகளை தொடங்கினர்.