சென்னை விமானநிலையத்தில் இன்று பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன் திட்டம் அமல்: காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார் ஒன்றிய அமைச்சர்

4 hours ago 3

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் இந்திய பயணிகளின் வசதிக்காக, இன்று மாலை முதல் பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன்-டிரஸ்டட் டிராவலர் திட்டம் அமலுக்கு வந்தது. இத்திட்டத்தை ஒன்றிய உள்துறை அமைச்சர் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இதனால் குடியுரிமை சோதனை பிரிவில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்ப்பதால் விமான பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் வெளிநாடு செல்லும் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு குடியுரிமை சோதனை பிரிவு மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வந்தது. அங்கு பயணிகள் நீண்ட வரிசையில் பலமணி நேரம் காத்து நின்று, அதிகாரிகளின் கேள்விகளுக்கு முறையாக பதிலளித்து வெளியே வருவதற்குள் வெளிநாட்டு பயணிகளுக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது.

மேலும் நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலான இச்சோதனை முடிந்து பாஸ்போர்ட்டில் குடியுரிமை அலுவலக முத்திரை குத்தி, பயணியின் கையில் அலுவலர் பாஸ்போர்ட் தரும்வரை பயணிகளின் திக்கென்ற மனதுடன் காத்திருக்க வேண்டிய அவலநிலை தொடர்ந்து வந்தது. அதே சமயம் குடியுரிமை சோதனை என்பது மிக முக்கியமானது. இது, நமது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால், யாருக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட மாட்டது. மேலும், இப்பிரிவு இந்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் இயங்கி வருகிறது. இப்பிரச்னையில் இருந்து வெளிநாட்டில் இருந்து வரும் இந்திய பயணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கும் வகையில், பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன்-டிரஸ்டட் டிராவலர் புரோகிராம் (FTI-TTP) எனும் புதிய திட்டத்தை இந்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

அதன்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகள், பூர்வீக இந்தியர்களாக இருந்து தற்போது வெளிநாடுகளில் நீண்ட காலமாக வசிப்பவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் மூலமாகப் பலனடைய முடியும். இதன்மூலம் பலன் பெற விரும்புபவர்கள், இதற்கென தனியே உருவாக்கப்பட்ட இணையதள முகவரியில் பெரியவர்கள் ரூ.2 ஆயிரம், குழந்தைகள் ரூ.1000, வெளிநாடுவாழ் இந்தியர்கள் 100 அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி, தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். இக்கட்டணம் ஒவ்வொரு முறை பயணம் செய்யும்போது செலுத்த வேண்டாம். ஒருமுறை செலுத்தினால், அவர்களின் பாஸ்போர்ட் காலாவதி ஆகும்வரை அக்கட்டணம் செல்லுபடியாகும். தங்களின் பெயர்களை கட்டணத்துடன் பதிவு செய்யும்போது, அவர்களின் முக அடையாளங்கள், கைவிரல் ரேகைகள், கருவிழி போன்றவற்றை பதிவு செய்ய வேண்டும்.

இவர்கள் இந்திய பயணத்தின்போது, அந்தந்த விமானநிலையங்களில் உள்ள தனி கவுன்டர்களில் பொருத்தப்பட்டுள்ள நவீன கருவிகள் மூலம், அவர்களுடைய முகம் அடையாளங்கள் பரிசோதிக்கப்பட்டு, அவர்களின் பாஸ்போர்ட்டில் குடியுரிமை முத்திரை விரைவில் பதிக்கப்பட்டு குடியுரிமை சோதனைகள் முடிந்து, அடுத்தகட்ட பாதுகாப்பு சோதனைக்கு சென்றுவிடலாம். இந்த அதிநவீன பாஸ்ட் டிராக் திட்டம் கடந்த ஆண்டு டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் துவங்கியது. இதையடுத்து சென்னை, மும்பை, ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா, கொச்சி மற்றும் அகமதாபாத் ஆகிய 7 விமானநிலையங்களில் விரைவில் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு வருகை மற்றும் புறப்பாடு குடியுரிமை பகுதியில் தனித்தனியே 2 என மொத்தம் 4 சிறப்பு கவுன்டர்கள் அதிநவீன கருவிகளுடன் அமைக்கப்பட்டன. எனினும், சென்னை விமானநிலையத்தில் பாஸ்ட் டிராக் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்ததால் பயணிகளிடம் அதிருப்தி நிலவியது. இந்நிலையில், சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் அதிநவீன பாஸ்ட் டிராக் திட்டத்தை செயல்படுத்த டெல்லியில் உள்ள மத்திய குடியுரிமை பிரிவின் தலைமை அலுவலகம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து, அகமதாபாத் விமானநிலையத்தில் இருந்து இன்று மாலை சென்னை விமானநிலையத்தில் அதிநவீன பாஸ்ட் டிராக் திட்டத்தை காணொலி காட்சி வாயிலாக ஒன்றிய உள்துறை அமைச்சர் துவக்கி வைக்கிறார். இதைத் தொடர்ந்து, சென்னை விமானநிலையத்தில் இன்று முதல் பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன் சிஸ்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இதற்காக பன்னாட்டு முனையத்தில் வருகை பகுதியில் 2 கவுன்டர்கள், புறப்பாடு பகுதியில் 2 கவுன்டர்கள் என மொத்தம் 4 தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பயணிகளின் வரவேற்பை பொறுத்து, இந்த கவுன்டர்கள் இன்னும் அதிகரிக்கப்படலாம் என்று சென்னை விமானநிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குடியுரிமை பிரிவில் நீண்ட நேர காத்திருப்புக்கு முடிவு கிடைத்ததில் ஏராளமான பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

The post சென்னை விமானநிலையத்தில் இன்று பாஸ்ட் டிராக் இமிக்ரேஷன் திட்டம் அமல்: காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார் ஒன்றிய அமைச்சர் appeared first on Dinakaran.

Read Entire Article