சென்னை விமான நிலையத்தில் கொசு தொல்லையால் பயணிகள் அவதி: இணைய தளத்தில் புகார்

2 months ago 10

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலைய வளாக பகுதிகளில் தற்போது கொசுப் புகை மற்றும் மருந்து அடிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டதால், அங்கு கொசு தொல்லை அதிகரித்து, உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை விமான நிலையத்தின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையம் உள்பட பல்வேறு வளாகப் பகுதிகளில் சமீபகாலமாக கொசு தொல்லை அதிகரித்துள்ளது. குறிப்பாக, உள்நாட்டு விமான நிலைய டெர்மினல் 1 வருகை பகுதியில், கொசு தொல்லை அதிகளவு உள்ளது. மேலும், பன்னாட்டு முனையமான டெர்மினல் 2, மற்றொரு உள்நாட்டு முனையமான டெர்மினல் 4 பகுதிகளிலும் அதிகளவில் கொசு தொல்லை உள்ளது.

இதில், 2வது தளத்தில் உள்ள புறப்பாடு பகுதிகளில் கொசு தொல்லை குறைவாக உள்ளது. இதனால் வெளிநாடு மற்றும் உள்நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வரும் விமான பயணிகளை, விமான நிலையத்தில் கொசுக்கள்தான் அதிகளவில் வரவேற்பது போல் உள்ளது. இந்த கொசுக்கடி வெளிநாட்டு பயணிகளுக்கு புதிய அனுபவமாகவும், அவர்களின் முகங்களை சுளிக்க வைக்கிறது. பொதுவாக, குளிர்சாதன வசதி பொருத்தப்பட்ட அறைகள் மற்றும் ஹால்களில் அதிகளவு கொசு தொல்லை இருக்காது எனக் கூறுவர். ஆனால், சென்னை விமான நிலைய குளிர்சாதன பகுதிகள் நேர்மாறாக உள்ளது.

சென்னை விமான நிலைய வளாகத்தில் தொடர்ந்து வேலைபார்க்கும் பல்வேறு அரசு மற்றும் தனியார் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் சிஐஎஸ்எப் படை வீரர்கள் தினசரி கொசுக்கடி தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதிலும், இங்கு பகல் நேரங்களைவிட இரவு நேரங்களில்தான் கொசுத் தொல்லை அதிகரிப்பால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்குமுன் சென்னை விமான நிலைய வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு கொசுக்களை விரட்ட புகை அல்லது ஸ்பிரே மூலம் மருந்து அடிப்பது வழக்கம். ஆனால், சமீபகாலமாக மாதத்தில் ஒரு நாள்கூட கொசுப்புகை மற்றும் ஸ்பிரே மூலம் கொசு மருந்து அடிக்கும் பணிகள் நடைபெறுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இப்பணிகளை விரைவில் துவக்கி, விமான நிலைய வளாகங்களில் கொசு தொல்லையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று விமான நிலைய ஆணைய இணையளதளத்தில் ஏராளமான பயணிகள் புகார்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு உங்களது புகாரை பதிவு செய்து கொண்டோம். கொசுக்களை கட்டுப்படுத்த மருந்து அடிக்கும் பணிகளை தனியார் நிறுவன ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு அறிவுறுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று விமான நிலைய அதிகாரிகள் பதில் மட்டுமே கூறி வருகின்றனர். எனினும், சென்னை விமான நிலைய வளாகத்தில் கொசுக்கடி தாங்க முடியவில்லை என்று பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் கொசு தொல்லையால் பயணிகள் அவதி: இணைய தளத்தில் புகார் appeared first on Dinakaran.

Read Entire Article