சென்னை: சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் கடந்த 8 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்ட 9 வயது மோப்ப நாய் சீசர் பணி ஓய்வு பெற்றது. அந்த மோப்ப நாய்க்கு பதக்கங்கள் வழங்கி, கேக் வெட்டி, சிகப்பு கம்பள விரிப்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தி வழி அனுப்பி வைக்கப்பட்டது. அதேபோல், புதிதாக பணியில் சேர்க்கப்பட்டுள்ள 9 மாத மோப்ப நாய் யாழினிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டுகள், அபாயகரமான பொருட்கள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள், உள்ளிட்டவைகளை கண்டுபிடிக்கவும், முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பணிக்காகவும் மோப்ப நாய்கள் “ஸ்குவாட்” பிரிவை அவர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இந்தப் பிரிவில், பயிற்சி பெற்ற 10 மோப்ப நாய்கள் பணியில் உள்ளன. மோப்ப நாய்கள் ஷிப்ட் முறையில், 24 மணி நேரமும் சென்னை விமான நிலையத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.