சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா

4 months ago 16

திருப்போரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை விஐடி மாணவர்களிடையே கடந்த ஜனவரி 3ம்தேதி முதல் 9ம்தேதி வரை கபடி, கவிதை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில், ஏராளமான மாணவ – மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், சென்னை விஐடி வளாகத்தில் ஜனவரி 9ம்தேதி நடந்த சர்வதேச சமத்துவ பொங்கல் விழாவினை விஐடி பல்கலைக் கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான கோ.விசுவநாதன், விஐடியின் துணை தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் துவங்கி வைத்தனர். விழாவில், அமெரிக்காவை சேர்ந்த ஆர்ஐடி கல்வி நிறுவனத்தின் தலைவர் பிரபு டேவிட் உள்பட 30 சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பரிவட்டம் கட்டி கரும்பு வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் பொங்கல் பானையில் பொங்கல் வைக்கப்பட்டது.

அப்போது, அனைவரும் `பொங்கலோ பொங்கலோ’ `பொங்கலோ பொங்கலோ’ என்று மகிழ்ச்சி பொங்க கோஷங்களை எழுப்பினர். சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நாட்டுப்புற கலைஞர்களால் தேவராட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் அரங்கேற்றப்பட்டது. மேலும் பல்லாங்குழி, பரமபதம், பம்பரம் விடுதல் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, ஜல்லிக்கட்டு காளை மாடு காட்சிப்படுத்தப்பட்டது. இவற்றை வெளிநாட்டு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர். பாரம்பரிய முறையில் சர்வதேச பொங்கல் விழா கொண்டாடியது வெளிநாட்டு விருந்தினர்களை வெகுவாக கவர்ந்தது.

இதைத்தொடர்ந்து, அறிஞர் அண்ணா தமிழ் மன்றம் நடத்திய பொங்கல் விழா நேற்று மாலை நடந்தது. சிறப்பு விருந்தினராக திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன் குழுவினர் பங்கேற்று, கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். நிகழ்ச்சியில் வி.ஐ.டியின் துணை தலைவர் முனைவர் ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர் தியாகராஜன், கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

The post சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Read Entire Article