சென்னை ரேஸ் கிளப்பில் செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

3 months ago 19

சென்னை: சென்னை ரேஸ் கிளப்பில் செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் குதிரை பந்தய சுற்றுப்பாதை வழித்தடத்தின் நடுவில் 147 ஆண்டுகளுக்கு முன்பு கோல்ப் மைதானம் அமைக்கப்பட்டது. இதனை மெட்ராஸ் ஜிம்கானா கிளப் நிர்வகித்து வருகிறது.

ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான குத்தகை ரத்து செய்த தமிழக அரசு. ரேஸ் கிளப்பின் நுழைவுவாயில்களை சீல் வைத்தது. இதை எதிர்த்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கோல்ப் மைதானத்தில் சில பணிகளை மேற்கொண்டு வருவதால் கோல்ப் மைதானத்தை சேதப்படுத்தும் தமிழக அரசுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஜிம்கானா கிளப் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அந்த மனுவில் ஜிம்கானா கிளப், ரேஸ் கிளப் உறுப்பினர்கள் கோல்ப் மைதானத்தில் விளையாடி வருவதாகவும் மைதானத்தை பராமரிக்க ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் செலவிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அங்குள்ள சமையலறை, மனமகிழ் மன்றம், மதுபான பார் உள்ளிட்ட இடங்களில் 50 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாகவும் இதற்கான வசதிகளை 500 உறுப்பினர்கள் வரை வழக்கமாக பயன்படுத்தி வந்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் , நாட்டிலேயே பழமையான 3 வது கோல்ப் மைதானமான இந்த மைதானத்திற்கு செல்லும் நுழைவு வாயில் சீல் வைக்கும் முன் தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவிக்க எந்த அவகாசமும் வழங்கப்பட வில்லை எனவும் இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது ஜிம்கானா தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர் ராமன் ஆஜராகி வாதிட்டார்.

ஜே.சி.பி டிராக்டர், புல்டவுசர் ஆகிய இயந்திரங்களை கொண்டு 90 மீட்டர் அகலத்திற்கு 10 மீட்டர் ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டுள்ளதாகவும், இதனால் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதைய நிலையை நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் அரசு நிலம் சென்னை ரேஸ் கிளப்க்கு தான் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அந்த இடங்களில் பணிகளை மேற்கொள்ள கூடாது என வழக்கு தொடர்வதற்கு ஜிம்கானா கிளப்புக்கு எந்த ஒரு அடிப்படை உரிமை இல்லை எனவும் இதே கோரிக்கையுடன் சிவில் வழக்கில் ஜிம்கானா கிளப் தாக்கல் செய்ததாகவும் சுட்டி காட்டினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எந்த ஒரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கூறி மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

 

The post சென்னை ரேஸ் கிளப்பில் செயல்பட்டு வந்த கோல்ஃப் மைதானத்தை தோண்டும் பணிகளுக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article