சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 2024-ம் ஆண்டில் மட்டும் 37 பேருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப் பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், ரத்தவியல் நிபுணரும், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை நிபுணருமான அருணா ராஜேந்திரன் ஆகியோர் கூறியதாவது: உடலில் உள்ள 206 எலும்புகளுக்கு உள்ளேயும் மஜ்ஜை உள்ளது. அதில் இருந்துதான் ரத்த அணுக்கள் உருவாகின்றன. குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அது தடைபட்டு முக்கிய மஜ்ஜைகளில் இருந்து மட்டும் அணுக்கள் உற்பத்தி செய்யப் படும்.