சென்னை ரயில் நிலையங்களில் மின் வாகன சார்ஜிங் பாயின்ட் அமைக்க திட்டம்

1 week ago 4

சென்னை: தெற்கு ரயில்வே ரயில் பயணிகளுக்கான வசதிகளை பல்வேறு விதங்களில் விரிவாக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான இ-சார்ஜிங் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உள்ள இ-சார்ஜிங் வசதிகளை மேம்படுத்தவும், புதிதாக சில ரயில் நிலையங்களில் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய வசதிகளை பொறுத்தவரை சென்னை புறநகர் ரயில் நிலையங்களில் மொத்தம் 28 நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் 8 ரயில் நிலையங்கள், சென்னை கடற்கரை – வேளச்சேரி பறக்கும் வழித்தடத்தில் 7 ரயில் நிலையங்கள் அடங்கும். தற்போது கலங்கரை விளக்கம், திருமயிலை, வேளச்சேரி, கோட்டூர்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

அடுத்தகட்டமாக, மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ், செங்கல்பட்டு, திரிசூலம், தரமணி, சென்னை கடற்கரை, ஆவடி, கிண்டி ஆகிய ரயில் நிலையங்களில் இ-சார்ஜிங் வசதி வரவுள்ளது. இந்த நடவடிக்கை எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தும் பயணிகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இதில் கூடுதலாக ஒரு சிறப்பம்சமும் உள்ளது. அதாவது, அவசரமாக புறப்பட்டு செல்ல வேண்டும் என்று விரும்பும் பயணிகள், தங்கள் வாகனத்தில் இ-பேட்டரியை கொடுத்து விட்டு முழுவதும் சார்ஜிங் செய்யப்பட்ட பேட்டரியை வாடகைக்கு வாங்கி கொண்டு செல்லலாம்.

மீண்டும் ரயில் நிலையங்களுக்கு வரும் போது வாடகைக்கு எடுத்த பேட்டரியை கொடுத்து விட்டு, ஒரிஜினல் பேட்டரியை மீண்டும் வாங்கிக் கொண்டு செல்லலாம். இந்த பேட்டரி பரிமாற்ற திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரி பரிமாற்ற மையங்கள் சென்னையில் உள்ள 11 புறநகர் ரயில் நிலையங்களில் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் விட்டுள்ளது. தற்போது ஒப்பந்ததாரர்களை அடையாளம் பணிகள் நடந்து வருகின்றன. இதையடுத்து ஜூன் முதல் வாரத்தில் இருந்து பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேட்டரி சார்ஜிங் மற்றும் பரிமாற்றம் என இரு விதமான சேவைகளும் திருவான்மியூர், எழும்பூர், வேளச்சேரி, எம்.எம்.சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் தற்போதைக்கு கிடைக்கும்.

The post சென்னை ரயில் நிலையங்களில் மின் வாகன சார்ஜிங் பாயின்ட் அமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article