சென்னை: “சென்னை, அமைந்தகரை மேத்தா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பணிகளுக்காக அழைத்துவரப்பட்ட 16 வயது சிறுமியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உருவாவதால் வன்கொடுமை சட்டத்தின் படி உரிய விசாரணை அதிகாரி நியமித்து விசாரணையை அரசு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இழப்பீடும் அரசு வேலையும், குடியிருக்க வீடும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்,” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை செயலாளர் ஜி.செல்வா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, அமைந்தகரை மேத்தா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீட்டு வேலை பணிகளுக்காக அழைத்துவரப்பட்ட 16 வயது சிறுமி வீட்டு உரிமையாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்களால் சித்தரவதை செய்யப்பட்டு அக்டோபர் 31-ம் தேதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூர செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனங்களை தெரிவிக்கிறது . சிறுமி கொலைக்கு காரணமான ஆறு பேரை நவம்பர் 2-ம் தேதி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.