சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறும் கட்டுமான தளங்களில் சிறந்த பாதுகாப்பு செயல்திறனை நிரூபித்ததற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு 2024-ம் ஆண்டுக்கான சுரக்‌ஷா புரஸ்கார் வெண்கல விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்தின், தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்தியா (NSCI) சார்பில், 2024-ம் ஆண்டுக்கான பாதுகாப்பு விருதுகளில் மதிப்புமிக்க சுரக்‌ஷா புரஸ்கார் வெண்கல விருது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பு மிக்க அங்கீகாரம், 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறும் கட்டுமான தளங்களில் சிறந்த பாதுகாப்பு செயல் திறனுக்காக வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.