சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டம் 2027ம் ஆண்டு டிசம்பருக்குள் முடியும்: திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்

2 hours ago 1


புதுடெல்லி: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் திட்டமிட்டப்படி 2027ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிவடையும் என ஒன்றிய அரசு உறுதி அளித்துள்ளது. மாநிலங்களவையில் திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் எழுப்பிய கேள்வியில், “தமிழ்நாட்டில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன? அதன் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்பார்க்கப்படும் இறுதி கட்ட நிறைவு தேதி, மேலும் ஒப்பந்தத்தின்படி திட்டத்திற்காக ஒன்றிய அரசு மேற்கொண்ட மொத்தச் செலவுகள் எவ்வளவு? திட்டத்தை கண்காணித்து உரிய நேரத்தில் முடிப்பதை உறுதி செய்ய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என்று கேட்டிருந்தார்.

அதற்கு ஒன்றிய அரசின் மாநிலங்களுக்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஸ்ரீ டோகன் சாஹு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், “சுமார் 118.9 கிமீ பாதை நீளம் கொண்ட சென்னை மெட்ரோ 2ம் கட்டத் திட்டதுக்கு ஒன்றிய அரசு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்ட பணிகள் தற்போது 38.64 சதவீதம் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. அதேபோன்று சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முன்னதாக திட்டமிட்டு கூறியபடி வரும் 2027ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிவடையும்.

இந்த திட்டத்துக்கான ஒன்றிய அரசின் நிதியானது, திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் முன்வைக்கும் நிதித் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும். அதற்கு அரசு தயாராக உள்ளது. மேலும் திட்டத்தை சரியான நேரத்தில் முடிக்க பல்வேறு நிலைகளில் வழக்கமான கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேபோன்று தமிழ்நாட்டில் இருந்து கத்தாருக்கு முட்டை ஏற்றுமதிக்கும் போதிய நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டம் 2027ம் ஆண்டு டிசம்பருக்குள் முடியும்: திமுக எம்பி கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் கேள்விக்கு ஒன்றிய அரசு பதில் appeared first on Dinakaran.

Read Entire Article