சென்னை மாமன்ற கூட்டத்தில் நடந்த தகராறு வழக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விடுதலை: எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

3 weeks ago 4

சென்னை: கடந்த 2002ம் ஆண்டு சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் அப்போதைய துணை மேயர் கராத்தே தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக, சென்னை கண்ணப்பன் திடல் மீன் அங்காடி டெண்டர் தொடர்பாக பிரச்னையை எழுப்பியது. அப்போது, அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் மைக், பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பொருள்களை கொண்டு தாக்கியதில், அதிமுக கவுன்சிலர்களாக இருந்த ஜீவரத்தினம், பரிமளா, மங்கையர்கரசி, குமாரி உள்ளிட்ட பலருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அதிமுக கவுன்சிலரும், மாமன்ற தலைவராகவும் இருந்த சுகுமார் பாபு மற்றும் மாநகராட்சி மன்ற செயலாளர் ரீட்டா ஆகியோர் அளித்த புகாரில் சென்னை பெரியமேடு காவல்நிலையத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், செல்வி சௌந்தர்யா, கிருஷ்ணகிரி மூர்த்தி ஆகிய ஏழு பேருக்கு எதிராக இரண்டு வழக்குகள் பதிவு செய்யபட்டன.

இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்குகளை சென்னையில் உள்ள எம்.பி, மற்றும் எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் விசாரித்தார். காவல்துறை தரப்பில் 70க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து விசாரணையும் நிறைவடைந்ததையடுத்து, நீதிபதி ஜெயவேல் நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பை முன்னிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட ஏழு பேரும் நேரில் ஆஜராகியிருந்தனர். இதையடுத்து நீதிபதி, வழக்கில் அரசுத்தரப்பு சாட்சிகள் பலர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். குற்றச்சாட்டுக்களை காவல் துறை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதால் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்பட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று தீர்ப்பளித்தார்.

 

The post சென்னை மாமன்ற கூட்டத்தில் நடந்த தகராறு வழக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் விடுதலை: எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article