சென்னை, புறநகர் பகுதிகளில் கஞ்சா வாங்க வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட சிறை கூட்டாளிகள் கைது: போதையில் சுற்றுவதற்கு பைக்குகளை திருடியதும் அம்பலம்

3 weeks ago 5

துரைப்பாக்கம்: கஞ்சா வாங்க பணம் தேவைப்பட்டதால் சென்னை மற்றும் புறநகரில் வீடுகளில் திருடிய சிறை கூட்டாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். போதை ஏறியதும் பைக்கில் ஊர் சுற்றுவதற்காக பைக்குகளை திருடி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. சென்னை சோழிங்கநல்லூர், பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (50). அரசு பேருந்து நடத்துனர். இவர், கடந்த 19ம்தேதி சோழிங்கநல்லூர், குமரன் நகர் சிக்னல் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு சாவியை எடுக்காமல் அங்குள்ள ஒரு கடையில் டீ குடித்துள்ளார்.

அப்போது, அங்கு வந்த 2 மர்ம நபர்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பேருந்து நடத்துனரின் பைக்கை திருடிச்சென்றனர். இதை கண்ட பாஸ்கர், உடனிருந்த நண்பரின் பைக்கில் திருடிச்சென்ற பைக்கை பின்தொடர்ந்து அவர்களை பிடிக்க முயன்றபோது, அவர்கள் மின்னல் அதிவேகத்தில் தப்பிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து, செம்மஞ்சேரி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பாஸ்கர் புகார் அளித்தார்.

இதுபோல், செம்மஞ்சேரி ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில் நிறுத்தி வைத்திருந்த பைக்கை காணவில்லை என்று ஏழுமலை (28) என்பவர், செம்மஞ்சேரி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த இரண்டு பைக்குகள் திருட்டு புகாரின்பேரில், வழக்குபதிவு செய்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜூ, தலைமை காவலர் யாசர் அரபாத், காவலர்கள் வீரமணி, ரவி, ரபிக், தினேஷ், அஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து, பைக் திருடப்பட்ட பகுதி மற்றும் வழியெங்கும் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கலைஞர் கருணாநிதி சாலையில் நேற்று தனிப்படை போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகன பதிவு எண் இல்லாமல் பைக்கில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில், திருட்டு பைக் என்பது தெரியவந்தது. 2 பேரையும், போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நடத்திய விசாரணையில், சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (24), குமரன் நகர் காவல் நிலைய எல்லையில் பைக் திருடிய வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் புழல் சிறைக்கு சென்றதும், அதேபோல் தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகன் (24) சேலையூர் காவல் நிலைய எல்லையில் பைக் திருட்டு, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை என இரு குற்ற வழக்கில் கடந்த ஆகஸ்ட் 16ம்தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டதும் தெரியவந்தது.

சென்னை குமரன் நகர் காவல் நிலையம், புறநகர் சேலையூர் காவல் நிலையம் என இருவேறு பகுதியில் நடந்த பைக் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்கில் சிறை சென்ற பிரகாஷ்ராஜ் – மோகன் இருவரும் சிறையில் இருக்கும்போது நண்பர்களாகி உள்ளனர். கடந்த 18ம் தேதி புழல் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் 150 பேர் இரவு 10 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறையில் பிரகாஷ்ராஜ், மோகன் இருவரின் நட்பின் காரணமாக வெளியே வந்த அடுத்த நாளே (19ம்தேதி) சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதியில் அடுத்தடுத்து இரு பைக்குகளை திருடி சென்றுள்ளனர். மேலும், இருவரும் திருடிய பைக்கை மற்ற திருடர்கள் போல் விற்பனை செய்யாமல் பைக் செல்லும் இடம் வரை சென்று அதிலுள்ள பெட்ரோல் தீர்ந்தால் அங்கிருக்கும் மற்றொரு பைக்கை திருடி ஊரை சுற்றி வலம் வந்துள்ளனர். கஞ்சா வாங்க தேவைப்படும் பணத்திற்கு வீட்டின் பூட்டை உடைத்து திருடுவதும், கஞ்சா புகைத்த பின்பு ஊரை சுற்ற பைக் தேவைப்படுவதால் பைக் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கைதான 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post சென்னை, புறநகர் பகுதிகளில் கஞ்சா வாங்க வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட சிறை கூட்டாளிகள் கைது: போதையில் சுற்றுவதற்கு பைக்குகளை திருடியதும் அம்பலம் appeared first on Dinakaran.

Read Entire Article