பரமக்குடி: பரமக்குடியில் மர்மக் கும்பலால் வக்கீல் கொலை செய்யப்பட்டார். சென்னை தொழிலதிபர் கொலைக்கு பழிக்குப்பழியாக இச்சம்பவம் நடந்திருக்கலாமென போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே விக்கிரபாண்டியபுரம் வலசை கிராமத்தை சேர்ந்தவர் வக்கீல் உத்திரகுமார் (35). இவர், பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து சகோதரி ஜோதிமணி வீட்டிற்கு நடந்து சென்றபோது, டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த 3 பேர் கும்பல் உத்திரகுமாரை சரமாரியாக வெட்டியுள்ளது.
இதில் முகம் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உத்திரகுமார் இறந்தார். அவரது உடல் மருத்துவ பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை வேளச்சேரியில் 2024 மார்ச் மாதம் நடந்த தொழிலதிபர் பழனிச்சாமி கொலை வழக்கில் உத்திரகுமார் கைதாகி சிறையில் இருந்தார். சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியில் வந்தார். பழனிசாமிக்கும், உத்திரகுமாருக்கும் ரியல் எஸ்டேட் துறையில் முன்விரோதம் இருந்தது.
எனவே, பழனிச்சாமி தரப்பினர் பழிவாங்கும் விதமாக உத்திரகுமாரை கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் பரமக்குடி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். சம்பவ இடத்தை, ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் பார்வையிட்டார். குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி, உத்திரகுமாரின் உறவினர்கள், மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி அரசு மருத்துவமனை முன்பாக நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் உடனடியாக அப்புறப்படுத்தினர். உத்திரகுமார் கொலை தொடர்பாக பழனிச்சாமியின் உறவினர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
The post சென்னை தொழிலதிபர் கொலைக்கு பழிக்கு பழியா? பரமக்குடியில் வக்கீல் படுகொலை: 2 பேரிடம் விசாரணை appeared first on Dinakaran.