சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டம்

1 week ago 5

சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன், பங்குனி திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் மூஷிக வாகனத்தில் விநாயகர், சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர், பஞ்சமூர்த்திகள், தியாகராஜர் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது. சூரியனுக்கு அதிகார நந்தி வாகனத்திலும், சந்திரனுக்கு பூத வாகனத்திலும், புருஷா மிருக வாகனத்தில் பிருங்கி முனிவருக்கும் சந்திரசேகரர் காட்சியருளல் நிகழ்ச்சி நடந்தது. நாகம் மற்றும் யானை வாகனங்களில் சந்திரசேகரர் காட்சியருளல் நடந்தது. சந்திரன், பார்த்தசாரதி, ராமபிரானுக்கு தியாகராஜர் சாமி அருளல் நிகழ்ச்சி நடந்தது.

பங்குனி திருவிழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. இதற்காக கோவிலில் இருந்து காலை 6 மணிக்கு உற்சவர் சந்திரசேகரர் சாமி தேருக்கு எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடிக்கப்பட்டு, மாட வீதிகள் வழியாக வலம் வந்து தேர்நிலைக்கு வந்தது. விழாவில் கோவில் தக்கார் பாரதிராஜா, கோவில் செயல் அலுவலர் ஸ்டாலின் குமார் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நாளை (வெள்ளிக்கிழமை) பகல் 1 மணிக்கு கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், மாலை 5.30 மணிக்கு அகத்தியருக்கு திருமண காட்சி, வன்னிமரக்காட்சி, வருகிற 12-ந்தேதி காலை 6.30 மணிக்கு திருவான்மியூர் குப்பம் கடற்கரையில் சந்திரசேகரர் கடல் நீராடல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 9.30 மணிக்கு திரிபுரசுந்தரி, தியாகராஜர் திருமண விழா மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.

இதேபோல் சென்னை மண்ணடி லிங்கிச் செட்டி தெருவில் உள்ள பழமையான மரகதாம்பாள் சமேத மல்லிகேஸ்வரர் கோவிலிலும் பங்குனி மாத பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். 

Read Entire Article