சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

1 month ago 5

* ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும்

சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மையம் எச்சரிக்கையை தொடர்ந்து, உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க வேண்டும். ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநர் அபாஷ்குமார், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் சுப்ரியா சாகு, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, பொதுப்பணித்துறை செயலாளர் மங்கத் ராம் சர்மா, நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே மற்றும் அரசு உயர் அலுவலர்களும், காணொலி காட்சி வாயிலாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவர் அருண்ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் கலைச்செல்வி மோகன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் பிரபு சங்கர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சென்னை மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பின்வரும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி,
* இன்று (15ம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
* இன்று முதல் 18.10.2024 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.
* தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளுக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
* வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் மீட்பு படகுகள் உடனடியாக நிலைநிறுத்தப்பட வேண்டும்.

* மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுடைய பொறுப்பு மாவட்டங்களுக்கு சென்று, ஆயத்த பணிகளையும், மீட்பு, நிவாரண பணிகளையும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
* பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் மற்றும் பறக்கும் ரயில்களின் சேவைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும்.
* உணவுத்துறை மூலம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* தங்குதடையின்றி ஆவின் நிறுவனம் மூலம் பால் மற்றும் பால் பொருட்கள் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும்.
* முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவு பொருட்களை இருப்பு வைக்க அறிவுறுத்த
வேண்டும்.

* நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும்.
* ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் நிவாரண மையங்களில் இன்றே இருப்பு வைக்க வேண்டும். மேலும், மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
* மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்படும்போது, பொதுமக்களுக்கு உடனடியாக மாற்று வழித்தடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.
* அனைத்து மாவட்டங்களிலும் சாலைப்பணிகள் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் போதுமான ஒளிரும் பட்டைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
* மின் உற்பத்தி தடைபடாமல் இருக்கவும், மின் விநியோகம் சீராக இருக்கவும், கட்டுப்பாட்டு மையத்தில் கூடுதலான பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
* முட்டுக்காடு, பக்கிங்காம் கால்வாய் – கலைஞர் கருணாநிதி பாலம் அருகில், ஒக்கியம் மடுவு ஆகிய இடங்களில் நீர்வடிவதற்கான தடைகளை நீக்குவதற்கு போதுமான இயந்திரங்களை இருப்பில் வைக்க வேண்டும்.

* மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்.
* பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் வசிக்கும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
* மீட்பு பணிகளுக்கு தேவையான நீர் இறைப்பான்கள், மர அறுப்பான்கள் பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
* தடையற்ற குடிநீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய போதுமான ஜெனரேட்டர்களை வைத்திருக்க வேண்டும்.
* பொது சுகாதாரத்தை பேணிக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள்:

* விவசாயிகள், மீனவர்கள், நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகன உரிமையாளர்கள், விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பயணங்களை திட்டமிட்டுள்ளவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தொழிற்பேட்டைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமான பணியை மேற்கொள்பவர்கள் கனமழைக்கான திட்டமிடுதலையும், முன்னேற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.
* தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
* முக்கிய பொருட்கள் மற்றும் ஆவணங்களை நீர் புகா வண்ணம் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
* கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு பொதுமக்கள் கடற்கரை, சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் கூடவேண்டாம்.

* அறுந்து கிடக்கும் மின் கம்பிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும்.
* கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோருக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்.
* பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

* பொதுமக்கள் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். அரசு அலுவலர்கள் அளிக்கும் முறையான முன்னெச்சரிக்கைகளின்படி நடந்து கொள்ள வேண்டும்.
* தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்படி முன்கூட்டியே நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும்.

The post சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article