சென்னை டூ கொச்சி பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: 2 மணி நேரம் தாமதமாக சென்றது

4 months ago 10

சென்னை: சென்னையில் இருந்து 89 பேருடன் கொச்சி செல்லும் தனியார் பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் வானில் பறக்காமல், ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் 2 மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பட்டு சென்றது. சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சி செல்லும் தனியார் பயணிகள் விமானம், நேற்று காலை 6.30 மணிக்கு 84 பயணிகள், 5 விமான ஊழியர்கள் என மொத்தம் 89 பேருடன் புறப்பட இருந்தது.

விமானம் ஓடுபாதையில் ஓட தொடங்கிய போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து விமானி, விமானம் வானில் பறக்க தொடங்கினால் ஆபத்து என்பதை உணர்ந்து, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்து விட்டு, விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்தினார். இதையடுத்து விமானம் இழுவை வண்டி மூலம் இழுத்துக்கொண்டு வரப்பட்டு, புறப்பட்ட இடத்தில் வந்து நிறுத்தப்பட்டது.

அதன்பின்பு விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுது பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, அதே விமானம் 2 மணி நேரம் தாமதமாக நேற்று காலை 8.30 மணிக்கு மீண்டும் கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.

The post சென்னை டூ கொச்சி பயணிகள் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: 2 மணி நேரம் தாமதமாக சென்றது appeared first on Dinakaran.

Read Entire Article