
திருச்சி,
பிரதமர் மோடி தமிழகத்திற்கு இந்த மாத இறுதியில் வருகை தருகிறார். இதன்படி, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அவர் அரசு முறை பயணம் மேற்கொண்டு அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் இருந்து 27-ந்தேதி தமிழகத்தின் அரியலூருக்கு வருகை தருகிறார். அரியலூரின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.
பெரம்பலூர் மற்றும் தஞ்சையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கிறார். இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மத்திய அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அவருடைய வருகையை முன்னிட்டு, திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் பிரதமரின் விமானம் தரையிறக்கப்பட்டு ஒத்திகை நடந்தது.
இதன்பின்னர், திருச்சியிலிருந்து பிரதமரின் விமானம் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. பிரதமரின் வருகைக்காக, திருச்சி விமான நிலைய வரலாற்றிலேயே முதன்முறையாக பாதுகாப்பு ஒத்திகை பார்க்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, தஞ்சை ராணுவ தளத்தில் இருந்தும் பிரதமரின் விமானம் புறப்பட்டு சென்று ஒத்திகை பார்க்கப்பட்டது.
திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் செல்வது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. தமிழக சட்டசபைக்கான தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் பிரதமரின் தமிழக வருகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.