சென்னை ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை கலைவாணர் வளாகத்துக்கு மாற்றம்: குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று முதல்வர் அறிவிப்பு

1 week ago 2

சென்னை: குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சென்னை, ஜி.என். செட்டி சாலையில் அமைந்திருந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை கலைவாணர் அரங்க வளாகத்திற்கு மாற்றப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கலையுலக மாமேதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடிகர், பாடகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முக ஆற்றலை பெற்றவர்.அறிவியல் கருத்துகள் நாட்டில் பரவ வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவர், சீர்திருத்த கருத்துகளை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர்.
தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகருமான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1957 ஆகஸ்ட் 30 அன்று தனது 49வது வயதில் காலமானார்.

அவருக்கு முன்னாள் முதல்வர் அண்ணாவால் 14.1.1969ம் ஆண்டு சென்னை ஜி.என்.செட்டி சாலை, திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் உருவசிலை திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு அந்த சாலை சந்திப்பில் உயர்மட்ட பாலம் கட்டியபோது அவரது சிலை சந்திப்பின் ஒரு பகுதியில் தற்காலிகமாக நிறுவப்பட்டது. தற்போது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தார்கள், அவரது சிலையை அந்த இடத்தில் இருந்து அகற்றி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் அக்கோரிக்கையை ஏற்று, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உருவச்சிலையை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து பாதுகாப்பாக அகற்றி சென்னை, வாலாஜா சாலையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் விரைவில் நிறுவப்படும் என அறிவித்துள்ளார்.

The post சென்னை ஜி.என்.செட்டி சாலையில் அமைந்துள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை கலைவாணர் வளாகத்துக்கு மாற்றம்: குடும்பத்தினர் கோரிக்கையை ஏற்று முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article