சென்னை: சென்னை வில்லிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் தனியார் ஓட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த விவேக் என்பவரின் உறவினர், அந்த உணவகத்தில் இருந்து தனது குழந்தைக்காக போண்டாவை நேற்று முன்தினம் வாங்கி சென்றுள்ளார். குழந்தை போண்டாவை சாப்பிடும் போது, அதிலிருந்த பிளேடு துண்டு ஒன்று வாயில் சிக்கியது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உறவினர்களுடன் ஓட்டலுக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் இச்சம்பவம் குறித்து உணவகத்தின் உரிமையாளர்கள் சரியாக பதிலளிக்காததால், உடனடியாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் விரைந்து வந்த சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டனர்.