
சென்னை,
சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையில் வாகன ஓட்டிகள் நேற்று வழக்கம்போல் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் திடீரென 10 அடி ஆழத்திற்குப் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் தடுப்புகள் அமைத்து வாகன ஓட்டிகளை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணை, இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவது தெரிய வந்தது. இதனால் பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். சுமார் 10 அடி ஆழம் 3 அடி அகலத்திற்கு இந்த பள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. மேலும், பள்ளத்தை மூடுவதற்கான நடவடிக்கையிலும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர்.