
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாளை (புதன்கிழமை) மகா சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு இரவு முழுவதும் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இந்த பூஜையில் இரவு முழுவதும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். மதுரை, தேனி, ராஜபாளையம், நெல்லை, விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்படுகிறது.
தாணிப்பாறை அடிவாரப்பகுதி மற்றும் கோவில் வளாகப்பகுதிகளில் மருத்துவ வசதி செய்யப்பட்டு வருகிறது. நீரோடை பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் தீயணைத்துறையினரும், தாணிப்பாறை அடிவாரப்பகுதி மற்றும் கோவில் வளாக பகுதிகளில் வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவ்வாறு மகா சிவராத்திரியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.