சென்னை,
தெற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர இருக்கிறது. முன்னதாக இது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரை வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டது. ஆனால் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தமிழக கடலோரப் பகுதிகளை அடைய உள்ளது.
இதன் காரணமாக இன்றும், நாளையும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாட்டில் இதர பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சூழல் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, இன்று வட கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும், இதர மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.