சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பரவலாக மழை பெய்தது. அதிலும் நேற்று காலை பல இடங்களில் கனமழை கொட்டியது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியது.
இதையடுத்து சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால் இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. சில இடங்களில் மழை பெய்யவில்லை. மேலும் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மணடல் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அது தற்போது விலக்கி கொள்ளப்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.