சென்னை பூந்தமல்லியில் இருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் நீங்கள் எப்போதாவது பயணித்திருக்கிறீர்களா? பயணிக்காதவர்கள், வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் பயணித்துப் பாருங்கள். பசுமை கொஞ்சும் பல அழகிய கிராமங்களைத் தரிசித்து வரலாம். அத்தகைய அழகிய கிராமங்களில் ஒன்றுதான் பட்டுமுடையார்குப்பம். இந்த ஊரில் சாலையின் இருபுறமும் மல்லி, ரோஜா, கனகாம்பரம் உள்ளிட்ட மணம் வீசும் மலர்த்தோட்டங்கள் வீற்றிருக்கின்றன. இப்போது வறுத்தெடுக்கும் வெயிலிலும் இந்தத் தோட்டங்கள் பசுமையுடன் சிரிக்கின்றன. இந்த ஊரில் பல ஆண்டுகளாக மல்லி, ரோஜா உள்ளிட்ட மலர் வகைகளை சாகுபடி செய்து வரும் ஜெகநாதன் என்ற விவசாயியை வெயில் இறங்குவது போல காட்டிய ஒரு பின்மதிய வேளையில் சந்தித்தோம்.
“எங்க ஊருல நெல், நிலக்கடலைன்னு வழக்கமான பயிர்களை சாகுபடி செஞ்சாலும் கொஞ்ச இடத்திலாவது பூ சாகுபடி செய்வோம். குறைஞ்ச இடத்துல நல்ல லாபம், பக்கத்துல இருக்குற காஞ்சிபுரம் மார்க்கெட்டுல வித்துடலாம். இதுமாதிரி சில வசதிகள் இருக்குறதால நாங்க தொடர்ந்து மல்லி, ரோஜா, கனகாம்பரம்னு சாகுபடி செய்றோம்’’ என எதார்த்தமாக பேச ஆரம்பித்த ஜெகநாதன், மேலும் தொடர்ந்தார்.“ எங்ககிட்ட 6 ஏக்கர் நிலம் இருக்கு. இதுல 2 ஏக்கர்ல நெல் போட்டுருக்கோம். 25, 25 சென்ட்டா பிரிச்சி மல்லி, கனகாம்பரம், ரோஜா வச்சிருக்கோம். தண்ணி கம்மியா இருக்குறதால மீதி இடத்தை சும்மாதான் போட்டுருக்கோம். கடந்த 3 வருசத்துக்கு முன்ன ராமேஸ்வரம் தங்கச்சி மடத்துக்கு போயி மல்லி நாத்துகளை வாங்கிட்டு வந்தோம். அதுக்கு முன்ன நிலத்தை நல்லா உழவு ஓட்டி பதமா வச்சிக்கிட்டோம். அதுல கயிறு பிடிச்சி நேர் நேரா ரெண்டரை அடிக்கு ஒன்னுன்னு நாத்துகளை நட்டோம். உழவு ஓட்டுன பள்ளத்து நாத்துகளை நட்டு மண்ணை தள்ளிடுவோம். வரிசைக்கு வரிசை 4 அடி இடைவெளி கொடுப்போம். நட்ட பிறகு பாசனம் கொடுத்ேதாம். அதுக்கப்புறம் 4 நாளுக்கு ஒரு பாசனம் கொடுப்போம். செடிக்கு செடி 3 அடி இடைவெளி கொடுக்க சொல்வாங்க. அதுமாதிரி கொடுத்தா நிறைய புல் முளையும்ங்குறதால நாங்க ரெண்டரை அடி விட்டுருக்கோம்.
களை வந்துச்சுன்னா உடனுக்குடனே எடுத்துடுவோம். களை அதிகமாச்சுன்னா கொசு மாதிரியான பூச்சிங்க வந்து தங்க ஆரம்பிச்சுடும். அதுங்க பெருகிடுச்சின்னா செடி துலுக்காம வதங்கி நிக்கும். செடி நட்ட 1 வாரத்துல டிஏபி, பாக்டம்பாஸ் உரங்களைக் கலந்து செடிக்கு பக்கத்துல குழியெடுத்து வைப்போம். இதை 6 மாசம், 1 வருசம்னு செடியோட அளவைப் பார்த்து அதிகமா கொடுக்க ஆரம்பிப்போம். பூச்சி, நோய்ங்களுக்கு ஏத்த மாதிரி மானோகுரோட்டபாஸ் மாதிரியான மருந்துளை ஸ்பிரே பண்ணுவோம். இப்படி பார்த்து பார்த்து பராமரிப்பு பண்ணிட்டு வந்தோம்னா 4 வருசத்துல பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். சில இடங்கள்ல 3 வருசத்துல கூட பூக்கள் வர ஆரம்பிக்கும். ஆரம்பத்துலயே கால் கிலோ, அரை கிலோன்னு பூ கிடைக்கும்.
வெயில் காலமான சித்திரை, வைகாசி மாதங்கள்ல ஒரு நாளைக்கு 25 கிலோ, 30 கிலோ பூ கூட கிடைக்கும். அப்புறமா படிப்படியா பூ குறைய ஆரம்பிக்கும். வருசத்துல 10 மாசத்துக்கு பூ எடுக்கலாம். தை மாசம்தான் பூ பூக்க ஆரம்பிக்கும். அப்படியே ஐப்பசி மாசம் வரைக்கும் பூ கிடைக்கும். கார்த்திகை, மார்கழி மாசங்கள்ல பூ பூக்காது. அதே மாதிரி பவுர்ணமி நாள் பூ அதிகமா கிடைக்கும். அமாவாசைல பூ கம்மியா கிடைக்கும். நிலா வெளிச்சம் பூ பூக்குறத அதிகரிக்கும். தை மாசத்துல அதிகமா பூவும் கிடைக்கும். விலையும் கிடைக்கும். ஒரு கிலோ பூ ஐநூறு, ஆயிரம் ரூபாய்க்கு மேலயும் விக்கும். அதே மாதிரி வீட்டு விசேஷம், கோயில் விசேஷ நாட்கள்லயும் நல்ல விலை கிடைக்கும். எப்படி பார்த்தாலும் மாசத்துக்கு சராசரியா 65 ஆயிரம் ரூபாய்க்கு குறையாம வருமானம் கிடைக்கும். இதுல 25 ஆயிரம் செலவானா கூட 40 ஆயிரம் லாபமா கிடைக்கும். 25 சென்ட்ல இது நல்ல லாபம் இல்லையா?’’ என மகிழ்ச்சியுடன் கூறி முடித்தார்.
தொடர்புக்கு:
ஜெகநாதன் 99419 90357.
பூந்தமல்லி – அரக்கோணம் ரூட்டில் அமைந்துள்ள கப்பாங்கோட்டூர், சிவபுரம், மாரிமங்கலம், கேசாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் அதிகளவில் மலர் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. மலர்களை தினந்தோறும் அறுவடை செய்யும் விவசாயிகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு நேரடியாக எடுத்துச்சென்று விற்பனை செய்கிறார்கள்.
பூக்களைப் பொதுவாக காலை நேரத்தில்தான் அறுவடை செய்கிறார்கள். மாலை நேரத்தில் தப்புப் பூக்கள் என்றழைக்கப்படுகிற காலையில் பறிக்கப்படாமல் விட்டுவிட்ட பூக்களை பறித்து சாலையோரம் நின்று ஒரு உழக்கு ரூ.20 என்ற விலைக்கு விற்பனை செய்கிறார்கள். பூந்தமல்லி – அரக்கோணம்- திருத்தணி சாலை என்பதால் அதிக வாகனங்கள் இவ்வழியே தினமும் செல்கின்றன. அவ்வாறு செல்பவர்கள் மணம் கமழும் மல்லிகைப் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கிறார்கள்.
The post சென்னை அருகே மணம் வீசும் மலர் கிராமங்கள்! appeared first on Dinakaran.