
புதுடெல்லி,
பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். அடுத்த சில நாட்களில் மின்துறை அமைச்சர் பொறுப்பு மீண்டும் அவருக்கு வழங்கப்பட்டது. சில தினங்களுக்கு முன் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இதனிடையே செந்தில் பாலாஜிக்கு எதிரான போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக லஞ்ச வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் விசாரணை குறித்த நிலையை அறிக்கையை சீலிட்ட உறையில் அளிக்க சிறப்பு கோர்ட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இதையடுத்து அந்த வழக்குகளின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை சீலிட்ட உறையில், சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு கோர்ட்டு தாக்க செய்தது. அந்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், நிலை அறிக்கையின் நகல்களை மனுதாரர், தமிழ்நாடு அரசு ஆகிய தரப்புக்கு வழங்க உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் எடுக்கப்பட்ட விசாரணை நடவடிக்கைகள் குறித்த நிலை அறிக்கையை மே 2-ந்தேதிக்குள் சிறப்பு கோர்ட்டு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணை மே 9-ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்தநிலையில் இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது
சிறப்பு நீதிபதியின் வழக்கு விசாரணைக்கு பெரிய அறை ஒதுக்கப்பட்டதாக தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும் மனுதாரருக்காக ஆஜரான வழக்கறிஞர் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஏற்கனவே ஆஜராகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட சுப்ரீம் கோர்ட்டு ,
குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஆஜராகிவிட்டு தற்போது மனுதாரருக்கு ஆஜரானதை ஏற்க முடியாது. ஊழலுக்கு எதிரான அமைப்பு தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. வழக்கறிஞர் சுப்பிரமணியனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கை ஜூலை 21-ம் தேதி ஒத்திவைத்தது.