செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

3 months ago 39

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 35 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். திமுக அரசு பொறுப்பு ஏற்கும்போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கவேண்டும் என்று முக்கிய அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கை எழுப்பி வந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்-அமைச்சர் பதவி எப்போது வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டபோது, மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இதனால் அமைச்சரவை மாற்றம் விரைவில் இருக்கும் என்றும், உதயநிதி ஸ்டாலின் விரைவில் துணை முதல்-அமைச்சராவார் என்றும் கட்சி தொண்டர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

இந்த நிலையில் அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் குறித்த முதல்-அமைச்சரின் பரிந்துரை கடிதம், கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு ஒப்புதல் அளித்தார். இது தொடர்பாக கவர்னர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

இதில் செந்தில் பாலாஜி உள்பட 4 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதல்-அமைச்சரின் பரிந்துரையை ஏற்று உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன், மனோ தங்கராஜ் ஆகியோர் அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். அதற்கு பதில் செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக சேர்க்கப்பட்டனர்.

மேலும் 6 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி உயர்கல்வித்துறை அமைச்சரான பொன்முடிக்கு வனத்துறையும், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரான தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் சுற்றுச்சூழல் நலத்துறையும், சுற்றுச்சூழல் அமைச்சரான வி.மெய்யநாதனுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரான கயல்விழிக்கு மனிதவள மேம்பாட்டுத்துறையும், வனத்துறை அமைச்சரான மதிவேந்தனுக்கு ஆதிதிராவிடர் நலத்துறையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜகண்ணப்பனுக்கு காதி மற்றும் பால்வளத் துறையும் ஒதுக்கப்பட்டன.

இந்த நிலையில், புதிய அமைச்சர்களுக்கான பதவி ஏற்பு விழா கவர்னர் மாளிகையில் உள்ள பாரதியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் செந்தில் பாலாஜி, நாசர், கோவி.செழியன், ராஜேந்திரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு, திமுக அமைச்சர்கள், திருமாவளவன், வைகோ, செல்வப்பெருந்தகை, முத்தரசன், வேல்முருகன், ஜவஹிருல்லா உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள், திமுக எம்.பி.க்கள், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

Read Entire Article