செந்தில் பாலாஜி அமைச்சராக அதிகாரம் செலுத்தும்போது சாட்சிகளை கலைக்க மாட்டாரா? - ராமதாஸ் கேள்வி

3 months ago 35

சென்னை,

செந்தில் பாலாஜி விடுதலையாக வாழ்த்து தெரிவிக்கும் ஒருவரின் கீழ் செயல்படும் சட்டத்துறை எவ்வாறு செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை நேர்மையாகவும், திறமையாகவும் நடத்தும்? என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர்கள் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே.ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக செந்தில் பாலாஜி, முனைவர் கோவி.செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். புதிய வாய்ப்பு பெற்றவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க.வில் உள்ள 131 உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் வன்னியர்கள். அவர்களின் எண்ணிக்கை 23, அதாவது 17.55%. அதன்படி மொத்தமுள்ள 34 அமைச்சர்களில் 6 அமைச்சர் பதவிகள் வன்னியருக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது வெறும் 3 அமைச்சர் பதவிகள் மட்டும்தான் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டியிருந்தேன்.

அதேபோல், பட்டியலினத்தவருக்கும் தி.மு.க. தொடர்ந்து சமூக அநீதியையே இழைத்து வருகிறது. தி.மு.க.வில் பட்டியலின/ பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 21. வன்னியர்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரும்பான்மை அவர்கள்தான். 16% கொண்ட அவர்களுக்கு 5 அமைச்சர் பதவிகளாவது வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், அமைச்சரவையில் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் 3 மட்டும்தான் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.

தற்போது சேலம் வடக்குத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனும், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த முனைவர் கோவி.செழியனும் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். இதனால், வன்னியர், பட்டிலினத்தவர் பிரதிநிதித்துவம் அதிகரித்திருக்கும் போதிலும் இதுவும் கூட போதுமானதல்ல.

பட்டியலினத்தவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமைச்சரவையின் அதிகாரப்படிநிலையில் முதல் 3 இடங்களிலோ அல்லது குறைந்தபட்சம் முதல் 5 இடங்களிலோ பட்டியலின சகோதரரோ, சகோதரியோ எப்போது நியமிக்கப் படுகிறார்களோ அப்போதுதான் அமைச்சரவையில் சமூகநீதி என்பதை பேசும் தகுதி தி.மு.க.வுக்கு வரும்.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சராக்குவதற்கு சட்டப்படியாக எந்த தடையும் இல்லை; ஆனால், அவருக்கு தார்மீகத் தகுதி இல்லை. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு பல மாதங்களாக சிறையில் இருந்த போதும், துறை இல்லாத அமைச்சராகவே செந்தில் பாலாஜி நீடித்தார்.

அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதைக் காரணம் காட்டித்தான் அவருக்கு தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து தான் அவர் பதவியிலிருந்து விலகினார். சிறையிலிருந்து பிணையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பிறகு மீண்டும் அவர் அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கிறார்.

சிறையில் துறை இல்லாத அமைச்சராக இருந்த போதே சாட்சிகளைக் கலைத்து விடுவார் என்று அஞ்சப்பட்ட செந்தில் பாலாஜி, இப்போது பிணையில் வெளிவந்து அமைச்சராக அதிகாரம் செலுத்தும் போது சாட்சிகளை கலைக்க மாட்டாரா?

சிறையில் இருந்து பிணையில் விடுதலையான செந்தில் பாலாஜியை ''உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது'' என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினே பாராட்டியுள்ள நிலையில் அவருக்கு கீழ் உள்ள காவல்துறை செந்தில் பாலாஜிக்கு எதிராக எவ்வாறு வலுவான விசாரணையை நடத்தும்? செந்தில் பாலாஜி விடுதலையாக வாழ்த்து தெரிவிக்கும் ஒருவரின் கீழ் செயல்படும் சட்டத்துறை எவ்வாறு செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை நேர்மையாகவும், திறமையாகவும் நடத்தும்?

பொதுமக்கள் மனதில் எழுந்துள்ள இந்த வினாக்களுக்கு தமிழக முதல் அமைச்சர் கண்டிப்பாக விடை அளிக்க வேண்டும். முதல்-அமைச்சரால் தியாகி என்று போற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அவருக்கு எதிரான வழக்குகளில் சாட்சிகளை கலைப்பது உள்ளிட்ட சட்டத்தை வளைக்கும் செயல்களில் ஈடுபடுகிறாரா? என்பதை நீதிமன்றங்களும், விசாரணை அமைப்புகளும் கண்காணிக்க வேண்டும். அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் அதை உரிய நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்."

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

Read Entire Article