ராஜபாளையம், மே 15: ராஜபாளையம் வழியாக செங்கோட்டை-மயிலாடுதுறை முன்பதிவில்லாத விரைவு ரயில், மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை-திண்டுக்கல்(16847/16848) எக்ஸ்பிரஸ் மற்றும் மதுரை-செங்கோட்டை(06665/06662) பயணிகள் ரயிலை இணைத்து செங்கோட்டை-மயிலாடுதுறை முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி முதல் மயிலாடுதுறை-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலாக 12 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை-திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் ரயில் 16 பெட்டிகளுடன் இயங்கி வந்த நிலையில் இரு ரயில்கள் இணைக்கப்பட்டு செங்கோட்டை-மயிலாடுதுறை ரயிலாக நீட்டிக்கப்பட்ட பின் 12 பெட்டிகளுடன் இயக்கப்பட்டதால் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இருக்கை நிரம்பி பயணிகள் நின்று கொண்டு பயணிக்கின்றனர். ராஜபாளையம் வந்து உடன் பயணிகள் நிற்க கூட இடம் இன்றி படிக்கட்டுகள் அருகே நின்று பயணம் செய்து வருகின்றனர். இதனால் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைத்து 20 பெட்டிகள் உடன் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மே 25ம் தேதி முதல் செங்கோட்டை – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ், மே 26 முதல் மதுரை – செங்கோட்டை(56719/56720) பயணிகள் ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைத்து 14 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது பயணிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post செங்கோட்டை- மயிலாடுதுறை முன்பதிவில்லாத ரயில்களில் 2 கூடுதல் பெட்டிகள் இணைப்பு: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.