புழல்: செங்குன்றம் – ஆவடி இடையே பழுதான மாநில நெடுஞ்சாலை, நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கையால் சீரமைக்கப்பட்டது. சமீபத்தில் பெய்த கனமழையால் செங்குன்றம் முதல் ஆவடி செல்லும் மாநில நெடுஞ்சாலை, செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கோணிமேடு, எல்லையம்மன்பேட்டை, ஆரிக்கும்பேடு காட்டூர், வடுகர் காலனி, கொள்ளுமேடு, வெள்ளனுர் ஆகிய பகுதிகளில் உள்ள மாநில நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இச்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், குறிப்பாக பைக்கில் செல்லும் பொதுமக்கள் சாலை பள்ளங்களில் விழுந்து படுகாயமடைந்து வருகின்றனர். மேலும், இச்சாலை வழியாக செல்லும் மாணவ, மாணவிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஒருசில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட மாநில நெடுஞ்சாலை துறையினருக்கு, பம்மதுகுளம் மற்றும் வெள்ளானூர் ஊராட்சி சேர்ந்த பொதுமக்கள் சார்பில் பலமுறை புகார்கள் அளிக்கப்பட்டது. இக்கோரிக்கையின்படி, மாநில நெடுஞ்சாலைத்துறை சென்னை கண்காணிப்பு கோட்டை பொறியாளர் செல்வகுமார், திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சிற்றரசு, அம்பத்தூர் உட்கோட்ட பொறியாளர் மகேஸ்வரன் ஆகியோரின் மேற்பார்வையில், இளநிலை பொறியாளர் ராமச்சந்திரன் தலைமையில், பம்மதுகுளம் அடுத்த கோணிமேடு கிராமத்தில் இருந்து வெள்ளனூர் வரை உள்ள 3 கிமீ தூரத்தில் மழையால் பழுதடைந்துள்ள சாலை போர்க்கால அடிப்படையில் இயந்திரங்கள் மூலம் பேட்ச் ஒர்க் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சாலை பேட்ச் ஒர்க் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
The post செங்குன்றம் – ஆவடி இடையே பழுதான நெடுஞ்சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.