செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கைபேசியால் இயங்கும் பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி: கலெக்டர் தகவல்

3 hours ago 2

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கைபேசியால் இயங்கும் பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்களில் வயல் வெளிகளில் உள்ள பம்பு செட்டுகளை இயக்கச் செல்கிறார்கள்.

அவ்வாறு செல்லும்போது, பாம்புக்கடி, விஷப்பூச்சுக்கடி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்க நேரிடுகிறது. இதைத் தவிர்க்கும் வகையில், தங்களது பம்பு செட்டுகளை வீடுகளில் இருந்தபடியே இயக்கும் கருவி மானியத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்பு செட்டுகளை தொலைவில் இருந்து கைபேசியின் மூலம் இயக்கிடவும், கண்காணிக்கவும், நிறுத்திடவும் முடியும்.

மேலும், ஆதிதிராவிடர் வகுப்பினர், பழங்குடியினர் வகுப்பினர், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள் மற்றும் பெண் விசாயிகளுக்கு மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7,000 மானியமாகவும், இதர விவசாயிகளுக்கு மொத்த விலையில் 40 சதவீதம் அல்லது ரூ.5,000 மானியமாக தற்போது வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ்க்கண்ட அலுவலர்களை தொடர்புக் கொண்டு பயனடையுமாறு மாவட்ட கேட்டுக்கொள்ளபடுகிறது. உதவிசெயற்பொறியாளர் நந்தனம் அலைபேசி 98405 54525, உதவிசெயற்பொறியாளர் மதுராந்தகம் அலைபேசி 90030 90440 என்ற எண்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

 

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கைபேசியால் இயங்கும் பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவி: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article