செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பாலூர் கிராமத்தில் இருந்து வில்லியம்பாக்கம், ரெட்டிப்பாளையம், சிங்கபெருமாள்கோவில் வழியாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ஜிஎஸ்டி நெடுஞ்சாலை, காஞ்சிபுரம்-செங்கல்பட்டு பைபாஸ் சாலையில் இருந்து துவங்குகிறது. இப்பகுதி துவங்குமிடத்தில் கடந்த சில ஆண்டுகளில் 2 முறை சாலை சீரமைக்கப்பட்டது. அப்படியிருந்தும், இந்த சாலை தரமான முறையில் சீரமைக்கப்படாததால் மீண்டும் பழுதாகியுள்ளது. இப்பகுதியில் மணலை கொண்டு முறையாக சாலை அமைக்கப்படாமல், எம்சாண்ட் மண்ணை கொண்டு சாலை அமைத்ததால், தற்போது அப்பகுதியில் ஏராளமான பள்ளங்கள் உருவாகி, மண்புழுதி பறந்து வருகிறது.
இதனால் அச்சாலையில் கனரக வாகனங்களுக்கு பின்னால் செல்லும் அனைத்து வாகன ஓட்டிகளும் சாலை சேதமாகி மண்புழுதி பறப்பதால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் பலருக்கு மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற பல்வேறு சுவாசக் கோளாறுகளும் ஏற்பட்டு வருகின்றன. மேலும், இந்த நெடுஞ்சாலைக்கு அருகிலேயே ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் மாணவர்கள் விடுதி உள்ளது.
இச்சாலையில் தொடர்ந்து மண்புழுதி பறந்து வருவதால், மாணவர்களின் உணவுகளிலும் மண்புழுதி படர்ந்துள்ளது. எனவே, செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலை மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பைபாஸ் சாலை பகுதியில் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, அங்கு மண்ணை கொண்து தரமான தார்சாலைகளை அமைத்திட மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
The post செங்கல்பட்டு அருகே புழுதி பறக்கும் ஜிஎஸ்டி சாலை: முறையாக சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.