செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு அடுத்த ஒத்திவாக்கம் ஊராட்சியில் பொன்விளைந்த களத்தூர் – ஒத்திவாக்கம் இடையே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால் ரயில்வே மேம்பாலத்திற்காக பில்லர்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக ஏற்கனவே அங்கிருந்த தார் சாலை அகற்றப்பட்டு அதன் மீது புதிதாக பில்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் ஒத்திவாக்கம் – பொன் விளைந்த களத்தூர் செல்லக்கூடிய சாலை முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளது. தற்போது விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அந்த சாலை முழுவதுமாகவே சேறும் சகதியமாக காட்சியளிக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவல் அறிந்து வந்த ஒத்திவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களின் புகார்கள் அனைத்தையும் சரி செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்த பின்னர் 2 மணி நேரமாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒத்திவாக்கம் – பொன்விளைந்த களத்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post செங்கல்பட்டு அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரி மறியல்: போலீசார் சமரசம் appeared first on Dinakaran.