சூலூர் அருகே ஜாமீனில் வந்தவரை கொன்ற வழக்கில் காரில் இருந்து தப்பிய கூலிப்படையை சேர்ந்த 2 பேருக்கு கால் முறிவு: முக்கிய குற்றவாளியான வீட்டு உரிமையாளருக்கு கை எலும்பு முறிவு

2 hours ago 1

சூலூர்: சூலூர் அருகே ஜாமீனில் வந்தவரை கொலை செய்த வழக்கில் போலீசாரை தள்ளிவிட்டு காரில் இருந்து தப்பிய கூலிப்படையை சேர்ந்த 2 பேருக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான வீட்டு உரிமையாளருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள வாகராயம்பாளையத்தில் கடந்த 15ம் தேதி மோசடி வழக்கில் கைதாகி ஜாமீனில் இருந்த இளங்கோவன்(48) என்பவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரது கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இளங்கோவன் வீட்டு உரிமையாளர் அமிர்தராஜ் மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை பிடித்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.

அப்போது இளங்கோவனை கூலிப்படை ஏவி அமிர்தராஜ் கொலை செய்ததும், இதற்கு அவரது 2வது மனைவி கலைவாணி உடந்தையாக இருந்ததும். தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், உள்ளூர் பிரமுகரான மைக்கேல் புஷ்பராஜ் என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர் மூலமாக திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த கூலிப்படையை சேர்ந்த வீராசாமி, ஆரோக்கியசாமி மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் போலீசில் சிக்கினர். இதையடுத்து அமிர்தராஜ் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்த மைக்கேல் புஷ்பராஜ் மற்றும் ஆரோக்கியசாமி ஆகியோரை கொலை நடந்த இடத்துக்கு தனிப்படை போலீசார் நேற்று அழைத்து சென்றனர். அங்கு இளங்கோவனை எவ்வாறு கொலை செய்தோம் என்பதை போலீசாரிடம் தத்ரூபமாக 2 பேரும் நடித்து காட்டினர்.

மேலும் கொலைக்கு பயன்படுத்திய கத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை ஊஞ்சப்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே டிராக் அருகில் புதைத்து வைத்திருப்பதாக கூறியதன் பேரில் அவர்களை அழைத்துக்கொண்டு ஆயுதங்களை மீட்க அழைத்து சென்றனர். ஊஞ்சப்பாளையம் பகுதியில் செல்லும் காரில் இருந்த மைக்கேல் புஷ்பராஜ் மற்றும் ஆரோக்கியசாமி ஆகிய போலீசாரை தள்ளிவிட்டு இறங்கி தப்பியோடினர். இருவரும் ரயில்வே டிராக்கில் ஏறி அங்கிருந்த பாலம் வழியாக மறுபுறம் குதித்து தப்ப முயன்றனர். அப்போது ஆரோக்கியசாமிக்கு வலது காலிலும், மைக்கேல் புஷ்பராஜ்க்கு இடது காலிலும் முறிவு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் முக்கிய குற்றவாளியான வீட்டு உரிமையாளர் அமிர்தராஜ், வீட்டில் வழுக்கி விழுந்ததில் அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டு உரிமையாளர் அமிர்தராஜ் மற்றும் அவரது மனைவி கலைவாணி, வீராசாமி ஆகியோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை கோவையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

The post சூலூர் அருகே ஜாமீனில் வந்தவரை கொன்ற வழக்கில் காரில் இருந்து தப்பிய கூலிப்படையை சேர்ந்த 2 பேருக்கு கால் முறிவு: முக்கிய குற்றவாளியான வீட்டு உரிமையாளருக்கு கை எலும்பு முறிவு appeared first on Dinakaran.

Read Entire Article