
சென்னை,
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற மே 16ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இந்த நிலையில், நடிகர் சூரியின் அடுத்த படத்திற்கான டைட்டில் லுக் போஸ்டர் நாளை காலை 11.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.. எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ இப்படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அத்துடன் "காயத்தை ஏற்படுத்திய ஆயுதத்தால் மட்டுமே காயத்தை ஆற்ற முடியும்" என்ற வசனமும் அறிவிப்பு போஸ்டரில் இடம் பெற்றிருக்கிறது.