பக்தி எப்போதும் உள்ளத்தில் நிலைத்துநின்று அதன் லட்சியத்தை எப்படி அடைகிறது என்பதை பக்தர்களின் வரிசை மூலம் காட்டலாம். இறைவனுக்கு காணிக்கை கொடுப்பதாலோ, நம்முடைய படிப்பறிவினால் இறைவனை அறிந்து கொண்டோம் என்று சொல்வதாலோ, கடுமையான பயிற்சிகளின் முயற்சி யாலோ பக்தியின் லட்சியத்தை எட்டிவிடமுடியாது. இறைவன் விரும்புவது நம் உள்ளம்; நம் ஆத்மா. வேறு எதைக் கொண்டும் அவரை திருப்தி செய்துவிட முடியாது.
வ்யாதஸ்ய ஆசரணம் த்ருவஸ்ய ச வயோ வித்யா கஜேந்த்ரஸ்ய கா
கா ஜாதிர் விதுரஸ்ய யாதவபதேர் உக்ரஸ்ய கிம் பௌருஷம்
குப்ஜாயா: கிமு நாம ரூபம் அதிகம் கிம்தத் ஸுதாம்னோ தனம்
பக்த்யா துஷ்யதி கேவலம் ந ச குணைர் பக்திப்ரியோ ஸ்ரீபதி:
கண்ணப்பர், குஹன் முதலிய வேடுவர் களிடம் இருந்த ஆசாரமும் சமயநெறியும் என்ன? துருவனின் வயது எவ்வளவு? ஆதிமூலமே என்று கூப்பிட்ட கஜேந்திரனின் படிப்பு என்ன? கிருஷ்ணனுக்குப் பிரியமான விதுரன் எந்தக் குலம்? கிருஷ்ணரால் நியமிக்கப்பட்ட யாதவ அரசர் உக்ரேசனரிடம் இருந்த வீரம் என்ன? கிருஷ்ணனின் அன்பைப் பெற்ற கூன்முதுகு குப்ஜையிடம் இருந்த அழகு என்ன? சுதாமா என்ற குசேலரிடம் இருந்த செல்வம் என்ன? பக்தி அல்லது பிரேமை ஒன்றே பகவானை மகிழ்விக்கிறது. பிரேமையின் மூலம் பகவானை வசப்படுத்தலாம். பக்தி ஒன்றே பகவானை மகிழ்விக்கும். பக்திக்கே அவன் கட்டுப்படுவான். பக்தியே முக்திக்கு வழியாகும். பக்தி மார்க்கத்தின் சாரம் இதுவே.
‘‘பத்தி மிகுமாயிற் பற்றொன்றும் இங்கில்லை
பத்தி மிகுமாயிற் பண்ணரிய யோகதுவே
பத்தி மிகுமேற் பதிமுருகன் ஞான மெய்தும்
பத்தி மிகுமேற் பரமசுக முத்தியெய்தும்
சித்தமே மித்தைத் தெளி”
– என்பது பாம்பன் சுவாமிகள் வாக்கு.
ஞான நெறியை வற்புறுத்திக் கூறும்
பாம்பன் சுவாமிகள் பக்திநெறிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார் ஏனென்றால் பக்தி நெறியே தூயநெறி.
‘‘பக்திமையாற் பணிசெய்யும் தொண்டர் தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும்”
என்பது அப்பரின் அருளுரை.
ஸாயிநாதர் பக்தியை முதன்மைப்படுத்தினார். அதனால்தான் ஸாயி பக்தர்கள் ஸாயியின் பிரேமையை, அன்பை முழுமையாகப் பெற்றனர். பக்தியின் ஐக்கிய பாவத்தால் மட்டுமே ‘மைம் அல்லாஹூம்’, ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்று சொல்ல முடியும். ஆழ்ந்த பக்தியுடன் மனத்தை பகவானிடம் ஒரு முகப்படுத்திய பக்தன் ஒருவனாலேயே மஹா வாக்யங்களின் ஞானத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
பாபா தம்மிடம் வந்தவர்களுள் மிகப் பெருபான்மையோருக்கு அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்றுபவராகத் தோன்றினார். ஆனால் அவரை ஒரு ஆசார்யனாக ஏற்றுக் கொண்ட பக்தர்களுக்கு அவர்களின் இதயத்தில் பக்தியை நன்கு பதிய வைத்தார். நற்பண்புகளின் உருவமாகவே வாழ்ந்த அவர், தாம் கடைப்பிடிக்காத எந்த ஒன்றையும் போதிக்கவில்லை. தாம் கடைப்பிடிப்பதை பக்தர்கள் கடைப்பிடித்து அவர்களும் கடைத்தேற வேண்டுமென விரும்பினார். எனவே, அதை உபதேசித்தார்.
பக்தி, நன்றியுணர்வு, சேவை, சமத்துவம், நியாயம், கருணை போன்ற பண்புகளை தன்னுடைய குருபக்தியிலிருந்து நேரிடையாக தம் பக்தர்களுக்கு போதித்தார். இவை பக்தி இல்லாமல் சாத்தியமில்லை. குருவையே இடையறாது தியானிப்பதால் குருவின் ஆத்மாவாகவே சீடன் ஆகிவிடுகிறான். ‘‘அபனா ஸரிகா கரீதத் தத்கல்” என்கிறார் துகாராம்.
சீடன் குருவிடமிருந்து நேசத்தை கிரகிக்கிறான். உடல், உயிர் இரண்டையும் நேசத்துடன் குருவிடம் ஒப்படைக்கிறான். சீடன் குருவை நேசிப்பவன், குருவுக்குப் பிரியமானவன் என்பதைத் தவிர வேறு எந்தவிதமாகவும் தன்னை நினைத்துக் கொள்ளமாட்டான். இத்தகைய நற்பண்பில்தான் பூரணத்துவம் பெறுகிறான். ஆன்மிகத்தில் பூரணத்துவம், ஸித்திகளில் பூரணத்துவம் என்று எல்லாவிதத்திலும் பூரணத்துவம் பெற்றுவிடுகிறான்.
பழங்களைப் பொறுத்தே மரங்களை மதிப்பிட வேண்டும். எவ்வளவு பேரை முழுமையடைந்தவர்களாகச் செய்கின்றாரோ அதைப் பொறுத்து ஒரு ஸத்குருவை மதிப்பிடலாம். ஸாயிநாதர் எல்லா மதங் களைச் சேர்ந்தவர்களையும் தன் பிரிதிநிதிகளாக ஆக்கினார் என்று தெரியும். ஆனால் அதற்கு அவரே காரணகர்த்தாவாக இருந்தும் நம்மைப் போன்ற ஜீவர்களுக்கு அதை தெரியப்படுத்தமாட்டார். நாம்தான் அறிந்துகொள்ள வேண்டும். அவர்மூலம் முழுமையடைந்த ஆத்மாக்கள் எத்தனை பேர் என்பது நமக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ‘பொழுது சாய்ந்து இருள் படர்ந்து வரும்போது ஆகாயத்தில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் வெளிப்படுவது போல, காலம் செல்லச் செல்ல பாபாவால் பூரணத்துவமடைந்தவர்களைக் குறித்த விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளிப்படுகின்றன’ என்கிறார். ஆந்திர பிரதேசத்தில் சாயி பக்தியைப் பரப்பிய ஆசார்ய E. பரத்வாஜா அவர்கள்.
சென்னை செங்குன்றத்தில் (Redhills) ‘ஸ்வாமியார்’ என்ற பிரசித்தி பெற்ற ஒரு மஹான் இருந்தார். இவர் பாகிஸ்தான் பெஷாவரில் பிறந்தவர். ‘பெஷாவர்’ என்றால் பாரசீக மொழியில் ‘உயரமான கோட்டை’ என்று அர்த்தம். அந்நகரத்தின் காவற்படையில் சிறிது காலம் பணிபுரிந்தவர். உன்மத்த நிலையில் அவதூதராக தெற்கு நோக்கிப் பயணம் செய்து சென்னை செங்குன்றம் வந்து தங்கினார்.
அவரைப் பைத்தியக்காரர் என்றே மக்கள் கருதினார்கள். ஆனால், ஒருநாள் அவர் வீதியில் செல்லும்போது எதிரில் ஒரு பைத்தியக்காரன் அவர் முன்னால் வந்து நின்றான். அப்போது ‘ஸ்வாமியார்’ அவனது கன்னத்தில் அறைந்தார். அப்பொழுதே அவனுடைய பைத்தியம் தெளிந்துவிட்டது. இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தான் மக்கள் அவரை ஒரு மஹான் என்று அறிந்து கொண்டனர். அதன் பிறகு அவரிடம் நோயாளிகளைக் கூட்டிவரத் தொடங்கினர்.
நோயாளிகளை தீவிரமாக நோக்கிவிட்டு பின் ஏதோ முணுமுணுத்தவாறு ஆகாயத்தை நோக்குவார். உடனே அந்த நோய் குணமாகிவிடும். எந்தக் கடையிலிருந்து தனக்கு வேண்டிய தின்பண்டங்களை எடுத்துக் கொள்கிறாரோ அந்தக் கடையில் வியாபாரம் அமோகமாக நடக்கும்.ஒருமுறை பூதூரைச் சேர்ந்த ஒரு விவசாயி ‘மழை வந்தால் நன்றாக இருக்கும். விவசாயம் சரியாக இல்லை’ என்று சொல்ல, ஆகாயத்தை நோக்கி ‘ஸ்வாமியார்’ ஏதோ முணுமுணுத்தார். கொஞ்சநேரத்தில் திருப்தியான மழை பெய்தது. இதன்பின் மக்கள் அவரை ‘பூதூர் ஷாஹின்ஷா பாபா’ என்று அழைக்கத் தொடங்கினார். அவரின் மகிமையை அறிந்து கொண்டு அவருக்குப் பணிவிடை செய்ய பல பக்தர்கள் வந்தனர். இராமானுஜம் செட்டியார், காசி, முனுஸ்வாமி, கனஷ்யாம் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். கனஷ்யாம் மட்டும் நடுஇரவு வரை இந்த பக்கீருக்குச் சேவை செய்வார்.
தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரி யாக ஸ்வாமியாருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தைச் சொன்னார் கனஷ்யாம். ஆனால், ஸ்வாமியார் சிரித்து ‘உனக்குத் திருமணம் ஆகும்; மூன்று குழந்தைகள் பிறப்பர்’ என்று சொன்னார். அதன்படியே அவருக்கு நிகழ்ந்தது.ஒருமுறை காசி, முனுஸ்வாமி, மற்றும் சிலர் ஸ்வாமியாரிடம் பேசிக் கொண்டிருந்தனர். ‘ஸ்வாமி இப்பொழுது எங்களுக்கு சூடான பிரியாணி தர முடியுமா? என்று விளையாட்டாகக் கேட்டனர். அப்பொழுது ஆகாயத்தை நோக்கி கலகலவெனச் சிரித்தார்.
சிறிதுநேரத்தில் அவர்கள் இருந்த குடிசையின் முன் ஒரு ஜட்கா வந்து நின்றது. இரண்டு பேர் பெரிய பாத்திரம் நிறைய சூடான பிரியாணியும் வாழை இலைகளையும் கொண்டு வந்து வைத்தனர். விரைவாகச் சாப்பிட்டு பாத்திரங்களைக் கொடுங்கள் என்று சொன்னார்கள். ஆச்சரியமடைந்த அனைவரும் ‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்’ என்று கேட்டனர். அதற்கு அவர்கள் ‘நாங்கள் எங்கிருந்து வந்தால் என்ன? நீங்கள் கேட்டது வந்துவிட்டது இல்லையா’ என்றனர். இதைப்போல இன்னும் பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியதோடு மட்டுமல்ல அப்பகுதிவாழ் மக்களுக்கு தன்னுடைய சக்தியால் அவர்களுக்குத் தேவையான சேவைகளையும் செய்துவந்தார்.
மிக எளிமையான பக்கீராக ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார். தம்முடைய தேவைகளுக்கு யாரிடமும் எதையும் அவர் கேட்டுப் பெறவில்லை. ஒருநாள் அவருக்குச் சேவை செய்யும் கனஷ்யாம் ‘உங்கள் குரு யாரென்று தெரிந்து கொள்ளலாமா?’ என்று கேட்டார். ‘நாளை சொல்கிறேன்.’ என்றார். அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு சூரியனைப் பார்க்கும்படி சைகை செய்தார். கனஷ்யாம் அப்படிப் பார்த்தபோது, ‘‘சூரியனுக்குள் ஐந்து நிமிட நேரத்திற்கு துவாரகாமாயியில் அமர்ந்துள்ள பாபாவின் தரிசனம் கிடைத்தது”. ஆச்சரியமடைந்த கனஷ்யாமிடம் ‘நீ நேற்று கேட்ட கேள்விக்கு இது தான் பதில்’ என்று சொல்லிச் சிரித்தார்.
1964 ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி இரவு 11 மணியளவில் ‘அல்லாஹோ’ என்று ஏழுமுறை உச்சரித்து இறைவனோடு ஐக்கியமானார்.மகான்களுள் ஒரு பெரிய மகானாகவும், அவுலியா என்றும், மாய மனிதன் என்றும் பாபா வாழ்ந்த காலத்தில் விதவிதமாக அழைக்கப்பட்டார். ஒவ்வொருவரிடமும் அவரவருக்கு ஏற்ற முறையில் அவர் நடந்து கொண்டார். எந்த கருத்தையும் யாரிடமும் அவர் வலுவாக திணிக்கமாட்டார். அவர்கள் வழியிலேயே சென்று அவர்களின் அத்வைத லட்சியத்தை அதாவது இறைவனோடு ஒன்றுபடுதலை எடுத்துக்காட்டி விளக்குவார்.
தன்னுடைய அருள் நிறைந்த வெளிப்பாடுகளால் ஒவ்வொரு ஆத்மாவையும் பூரணத்தை நோக்கிச் செலுத்துகிறார் பாபா. பாபாவின் அருள்பெற்ற எத்தனை ஆத்மாக்கள் இன்றும், இப்பொழுதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கு எப்படித் தெரியும்? பாபாவின் ஆழங்காண இயலாத அருளிச் செயல்கள் நமக்கு அடையாளம் காட்டும் வரை காத்திருப்போம். ‘காத்திருத்தல் சுகமானது’ என்பர் ஞானிகள். சாயி சரணம்.
முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள்
The post சூரிய தரிசனம் appeared first on Dinakaran.