சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
காஷ்மீரில், ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் ‘பஹல்காம்’ என்ற மலைபாங்கான பள்ளத்தாக்கு மற்றும் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அழகிய ஊராகும். இங்கு நேற்று சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு இருந்த நேரத்தில், பிற்பகல் 3 மணி அளவில் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் வந்து, அங்கு இயற்கையை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர்.
இதில் இன்று காலை வரை 28 பேர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களில் 2 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த சிலர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களை இந்த அரசு மீட்டு, சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், எனது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இத்துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்வதோடு, விரைவில் குனமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை: சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு appeared first on Dinakaran.