சுற்றுச்சூழல், வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் வெள்ளியங்கிரி மலையில் குப்பைகள் குவியாமல் தடுக்க என்ன செய்யலாம்?

1 month ago 5

கோவை: வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் வனத்துறையினர் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவில் வீசி செல்லும் குப்பைகளால் சுற்றுச்சூழலும், வனவிலங்குகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை அமைந்துள்ளது. கோவையில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள பூண்டி அடிவாரத்தில் இருந்து, மலை மீது அமைந்துள்ள சுயம்புலிங்கத்தை தரிசிக்க 5.5 கிமீ தூரம் மலைப்பாதையில் வனப்பகுதிகள் வழியாக மலையேற்றம் செய்ய வேண்டும்.

மலையேற்றம் செய்யும்போது ஏழு ஏற்ற இறக்கங்கள் இருப்பதால், 7 மலைகள் ஏறியதைப் போன்ற அனுபவம் ஏற்படுவதால், இதனை ஏழுமலை என்கிறார்கள். வெள்ளியங்கிரி மலையேற பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர். குறிப்பாக மகா சிவராத்திரி முதல் சித்ரா பெளர்ணமி வரை அதிக அளவிலான பக்தர்கள் மலையேற வருவது வழக்கம். 10 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். சமீப காலமாக ஆண்டுதோறும் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்தாண்டு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் வெள்ளியங்கிரி மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வருகின்றனர். நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேற்றம் செய்து வருகின்றனர். மலையேற்றம் செய்யும் பக்தர்கள் வீசி செல்லும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட் கவர்கள் போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனை தவிர்க்கும் வகையில் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தண்ணீர் பாட்டில்களுக்கு ரூ.20 டெபாசிட் தொகையாக வாங்கி கொண்டு, அதனை திருப்பி கொண்டு வரும் பக்தர்களுக்கு அந்த தொகையை திரும்ப அளித்து வருகின்றனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் சோதனை செய்தல், மலைப்பகுதிகளில் வீசப்பட்ட பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளையும் வனத்துறையினர் செய்து வருகின்றனர். இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்கள் மலைப்பகுதிகளுக்கு கொண்டு செல்வதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.

மலையேற்றம் செய்யும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், திண்பண்ட பாக்கெட்டுகள் உள்ளிட்ட குப்பைகளை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதன் காரணமாக மலைப்பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து குப்பை மேடாக காட்சியளிக்கிறது.  இதேபோல ஆறாவது மலையில் அமைந்துள்ள ஆண்டி சுனையில் குளித்து விட்டு, ஏழாவது மலையேறும் பக்தர்கள் அணிந்திருக்கும் துணிகளை அப்பகுதியில் விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதனால் அதிகளவிலான துணிகள் அப்பகுதியை சுற்றிலும் குவிந்து வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இவற்றால் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க குப்பைகளை அகற்றும் பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பாலகிருஷ்ணன் என்ற தன்னார்வலர் கூறியதாவது: வெள்ளியங்கிரியில் முதல் மலை முதல் ஏழாவது மலை வரை குப்பைகள் இல்லாத இடங்களே இல்லை என்பதற்கு ஏற்ப அனைத்து இடங்களிலும் குப்பைகள் நிறைந்து கிடக்கின்றன.

அடிவாரத்தில் வனத்துறையினர் சோதனை செய்தாலும், பிளாஸ்டிக் பொருட்கள் மலை மீது செல்வதை முற்றிலும் தவிர்க்க முடிவதில்லை. வனத்துறையில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தினால் கூட்டம் அதிகமுள்ள நேரங்களில் அனைவரையும் சோதனை செய்து அனுப்ப முடியாத நிலை உள்ளது. அதேபோல மலை மீது உள்ள கடைகளில் திண்பண்டங்கள், உணவு பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்டவையும் விற்பனை செய்யப்படுகின்றன.

பெரும்பாலான பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களையும், குப்பைகளையும் ஆங்காங்கே வீசி செல்கின்றனர். அடிக்கடி சுத்தம் செய்தாலும், குப்பைகளின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சுற்றுச்சூழலும், வனவிலங்குகளும் பாதிக்கப்படும். குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகள் வீசப்படும் உணவு பொருட்களை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. பக்தர்கள் குரங்கு உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதால், அவற்றின் உணவு பழக்கம் மாறி வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பொருட்களை மலை மீது கொண்டு செல்வதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். மலை மீது உள்ள கடைகளில் பிளாஸ்டிக்கில் அடைக்காத உணவு பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். தண்ணீர் பாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக பெறப்படும் ரூ.20 ஐ, ரூ.50 ஆக உயர்த்தினால், அப்பாட்டில்களை வீசாமல் கொண்டு வர வாய்ப்புள்ளது. அதேசமயம் இயற்கையான சூழலை பாழ்படுத்தக்கூடாது என்ற பொறுப்புணர்வோடு பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்வதையும், மலை மீது வீசுவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சுற்றுச்சூழல், வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் வெள்ளியங்கிரி மலையில் குப்பைகள் குவியாமல் தடுக்க என்ன செய்யலாம்? appeared first on Dinakaran.

Read Entire Article