
சென்னை,
கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் திரைத்துறையில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார். கமல் நடித்த 'உன்னைப்போல் ஒருவன்' படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். இவர் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் "3, வேதாளம், புலி, பூஜை, சாலர்" ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'கூலி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் டிரெயின், ஜன நாயகன், சலார் 2 ஆகிய படங்களிலும் நடித்துவருகிறார்.
இதற்கிடையில், தி ஐ (The Eye) என்ற சர்வதேச படத்தில் நடித்துள்ளார். தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாப்னே ஷ்மோன் இயக்கியுள்ள இப்படம் நாளை மும்பை வென்ச் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.