சுரண்டையில் கிரைண்டர் செயலி மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 9பேர் கைது

2 months ago 17

சுரண்டை,செப்.30: சுரண்டையில் கிரைண்டர் செயலி மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 9பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கடந்த சில மாதங்களாக கிரைண்டர் என்ற செயலி மூலம் பணத்தை பறிகொடுக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் கிரைண்டர் செயலியில் இணைந்துள்ளார். அந்த நபரை ஆசை வார்த்தை கூறி சுரண்டை அருகே அனுமன் நதிக்கரை அருகில் உளள காட்டுப்பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அவர் நேற்று முன்தினம் மாலை சுரண்டை அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை வீடியோ எடுத்து தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த நபர் சுரண்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் உத்தரவின் பேரிலும், ஆலங்குளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெயபால் பர்ணபாஸ் ஆலோசனையின் படி சுரண்டை காவல் ஆய்வாளர் செந்தில், எஸ்.ஐ.கற்பகராஜ் தலைமையில் தென்காசி மாவட்ட சிறப்பு தனிப்படை காவலர்கள், ஆலங்குளம் கோட்ட சிறப்பு தனிப்படை காவலர்கள் அந்த பகுதியில் உள்ள செல்போன் கேமராவில் பதிவானவர்கள் விவரங்களை வைத்து குற்றவாளிகளை ஒவ்வொருவராக கைது செய்தனர்.

விசாரணையில் மொத்தம் 10 பேர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. 10 நபர்களில் சுரண்டையைச்சேர்ந்த அரவிந்த் (25), ராமர் (19), மணிகண்டன் (18), மதியழகன் (20), மலரவன் (19), அழகு சுந்தரம் (19), முத்துக்குமார் (19), குற்றாலம் அருகே உள்ள மேலகரம் பகுதியைச் சேர்ந்த சுடலை மகாராஜா (21), வீ.கே.புதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி (25) ஆகிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 செல்போன்கள், இரண்டு அரிவாள், வெள்ளி மோதிரம், வெள்ளி அரைஞாண் கொடி, 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் சுரண்டை பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த சிறப்பு தனிப்படை காவலர்களை எஸ்.பி.சீனிவாசன், டி.எஸ்.பி.ஜெயபால் பர்ணபாஸ் ஆகியோர் பாராட்டினர்.

விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இது போன்ற குற்ற செயல் புரியும் எண்ணத்தோடு சமூக வலைதளங்களில் தங்களை அணுகும் நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற குற்ற செயல்களால் பாதிக்கப்படுபவர்கள் புகார் கொடுக்க தயங்காமல் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க மாநில காவல் கட்டுப்பாட்டு வரை தொடர்பு எண் 100 அல்லது தென்காசி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9884042 100 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கலாம். கிரைண்டர் ஆப் மற்றும் இது போன்ற வேறு செயலிகளை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post சுரண்டையில் கிரைண்டர் செயலி மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 9பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article