சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரிடம் டங்ஸ்டன் பிரச்னையை எடுத்துக் கூறியதையடுத்து, சுரங்கத்துறை அமைச்சகம் சுரங்க அனுமதி குறித்து மறுஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு கனிம ஏலம் வழங்கியதை ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழக கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் டங்ஸ்டன் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள விளக்கம் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்நிலையில் ஒன்றிய சுரங்க அமைச்சகம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு நீர்வளம் மற்றும் கனிமத்துறை அமைச்சரான துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்குட்பட்ட அரிட்டாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 2015 ஏக்கர் பரப்பளவிலான பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்திருக்கிறது.
தமிழ்நாட்டின் சிறந்த பல்லுயிர் வாழிடப் பகுதிகளில் ஒன்றான அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த முயற்சிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, ஏல முடிவை அறிவிக்கும் வரை தமிழகத்திடம் இருந்து எதிர்ப்பு வரவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்நிலையில், சுரங்க அமைச்சகம் மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுரங்க அமைச்சகத்தின் ஏலம் எவ்வாறு அடிப்படைக் குறைபாடுடையது என்பதையும், ஏலத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுக்கும், அதை மாநில அரசு மட்டுமே கையாள வேண்டும் என்பதையும், 3.10.2023 அன்று ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சருக்கு நான் எழுதிய கடிதத்தில், தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளேன். டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2023 அக்.3ல் ஒன்றிய அரசுக்கு கடிதம் மூலம் எச்சரித்துள்ளோம். புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரின் கடிதத்தில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் பிளாக், அரிட்டாப்பட்டியின் உயிர் பன்முகத்தன்மை பாரம்பரிய தளத்தை உள்ளடக்கியதாக சுரங்கத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததே தவிர, நில விவரங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. இருப்பினும் கனிமத் தொகுதியில் உயிர் பன்முகத்தன்மை பாரம்பரிய தளம் இருப்பதை நன்கு அறிந்த சுரங்க அமைச்சகம் ஏலத்தில் இறங்கியுள்ளது.
ஏல அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்றால், தற்போதைய ஒன்றிய அரசின் செயல்பாடுகளை அறிந்த எவருக்கும் இது ஒரு வீண் நடவடிக்கை என்பது தெரியும். சுரங்க குத்தகையை தான் வழங்க வேண்டும் என்பதை மாநில அரசு அறிந்திருக்கிறது. எனவே சுரங்க அமைச்சகத்துடன் பயனற்ற தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு பதிலாக அதன் உரிமையை ஒதுக்கி வைத்துள்ளது. தற்போது சுரங்க அமைச்சகமும் ஏலம் விட முடியும் என்றாலும், சுரங்கத்திற்கான குத்தகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என்று ஒப்புக் கொண்டுள்ளது. நில விவகாரங்களில் ஒன்றிய அரசுக்கு எந்த கருத்தும் இல்லை என்பது எளிமையான விஷயம்.
சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை மாநில அரசு மட்டுமே நிர்வகிக்க வேண்டிய நிலையில், மாநில அரசுக்கு மட்டுமே வருவாய் சேரும்போது, மாநில அரசின் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு ஏன் ஏலத்தில் இறங்கியது. நமது முதல்வர், பிரதமரிடம் இந்தப் பிரச்னையை எடுத்துக் கூறியதையடுத்து, சுரங்கத்துறை அமைச்சகம் மறு ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே சுற்றுச்சூழல் மற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு கனிம ஏலம் வழங்கியதை ஒன்றிய சுரங்கத் துறை அமைச்சகம் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏல அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்றால், தற்போதைய ஒன்றிய அரசின் செயல்பாடுகளை அறிந்த எவருக்கும் இது ஒரு வீண் நடவடிக்கை என்பது தெரியும்.
The post சுரங்க அனுமதியை நிறுத்தி வைத்ததற்கு வரவேற்பு டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்தே தீர வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு வலியுறுத்தல் appeared first on Dinakaran.