ஞாயிற்றுக்கிழமையில் அசைவம் எடுத்து குடும்பத்தோடு சாப்பிடுவது என்பது எழுதப்படாத விதியாகி விட்டது. அசைவம் என்றால் நம் ஆட்களுக்கு பொதுவாக கோழிக்கறிதான் என்பதும் பலருக்கு எழுதப்படாத விதியாகி இருக்கிறது. குறைந்த விலையில், குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் என்ற காரணத்திற்காகத்தான் அனைவருக்கும் கோழிக்கறி முதல் சாய்ஸாக இருக்கிறது. என்னதான் காடை, முயல், நாட்டுக்கோழி என வந்தாலும் பிராய்லர் என்கிற கறிக்கோழி விற்பனைதான் இன்றும் களைகட்டி வருகிறது. இதனால் கறிக்கோழி பண்ணைகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. அந்தவகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர் கறிக்கோழிகளை வளர்த்து, அதில் நல்ல லாபமும் பார்த்து வருகிறார். ஒரு காலைப்பொழுதில் அவரைச் சந்தித்தோம். “ மூன்றாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். எனக்கு விவரம் தெரிந்த காலம் முதலே விவசாயம்தான் எனக்கு தொழில். சீசனைப் பொருத்து காய்கறிகள், உளுந்து, கிழங்கு வகைகளைப் பயிரிடுவேன். கடந்த 15 வருடமாக கறிக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். இதில் 40 நாட்களுக்கு ஒருமுறை வருமானம் வருகிறது. இதற்கு நான் என்னுடைய உழைப்பை மட்டுமே மூலதனமாக வைத்து கோழிகளை வளர்த்து வருகிறேன்.
கறிக்கோழிகளைப் பொருத்தவரையில் 40 நாட்களிலேயே நன்கு வளர்ந்து இறைச்சிக்கு தயாராகிவிடும். கறிக்கோழி என்றாலே ஊசியால் வளரக்கூடியது என்ற தவறான எண்ணம் மக்களிடம் இருக்கிறது. நாங்கள் வாங்கி வளர்த்துக் கொடுக்கும் கோழிகளுக்கு அதன் வளர்ச்சிக்காக எந்தவொரு ஊசியும் போடுவது கிடையாது. தீவனத்தின் மூலம் மட்டுமே கோழிகளை வளர்ச்சியடையச் செய்கிறோம். கறிக்கோழிகள் வளர்ப்பதற்கு 8500 சதுர அடியில் கொட்டகை அமைத்திருக்கிறேன். இந்தக் கொட்டகையைச் சுற்றி கம்பி வலையும், கீழ்ப்பகுதியில் ஒரு அடி அளவில் அட்டைகளையும் வைத்திருக்கிறேன். அப்போதுதான் பூனைகள், நாய்கள், பாம்புகள் உள்ளிட்டவை கொட்டகைக்குள் வராது. தரையில் கான்கிரீட் போட்டு அதன்மேல் தேங்காய் நார், கடலைப் புண்ணாக்கு போட்டு அதன்மீது கோழிக்குஞ்சுகளை விடுவோம். இந்தக் கொட்டகையில் கிட்டத்தட்ட 7500 கோழிகள் வரை வளர்க்கலாம். ஆனால் நான் 6500 கோழிகளை மட்டுமே வளர்த்து வருகிறேன்.
இன்குபேட்டர் மூலம் பொரித்த கோழிக்குஞ்சுகளுக்கு சூடு தேவைப்படும். கொட்டகைக்கு உள்ளே 100 சதுரடி அளவிற்கு அட்டையை வைத்து அதில் கோழிக்குஞ்சுகளை விடுவோம். ஒவ்வொரு 100 சதுர அடிக்கும் 200 வாட்ஸ் பல்பை வைத்துள்ளேன். இது கோழிகளுக்கு வெப்பத்தைக் கொடுக்கும். குளிர் காலங்களில் கோழிகளுக்கு கூடுதல் வெப்பம் தேவைப்படும். அடுப்புக்கறியை வாங்கி வந்து, அதனை ஒரு பானையில் வைத்து நெருப்புக் கங்குகளாக மாற்றி ஒவ்வொரு 100 சதுரடிக்கும் வைத்துவிடுவோம். கோழிக்குஞ்சுகளுக்கு போதிய சூடு இல்லை என்றால் கால்களில் பாதிப்பு வரும். அவை தீவனம் எடுக்காமல் மெலிந்துவிடும். எளிதில் நோய் தாக்கக்கூடும்
.
கோழிக்குஞ்சுகள் பொரித்த 17 நாட்கள் வரை மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு, அரிசி ஆகியவற்றை நன்கு அரைத்து கோழிகளுக்கு தீவனமாக கொடுப்போம். இது நன்கு ஜீரணம் ஆகும். அதனால் கோழிகளுக்கு எந்தவொரு வயிற்றுப்பிரச்சனையும் வராது. அடுத்த 10 நாட்களுக்கு கோழிகளுக்கு கொரகொரப்பாக அரைத்த அரிசி, மக்காச்சோளம், கம்பு, கருவாடு உள்ளிட்டவற்றை தீவனமாக கொடுப்போம். இதை சாப்பிடும்போது கோழிகள் நன்கு திடமாக வளரும். இதன்பின்பு 40வது நாட்கள் வரை கோழிகளுக்கு சற்று பெரிய அளவில் தயார் செய்யபட்ட மக்காச்சோளம், கருவாடு, சோயா கலந்த பல்லட் தீவனத்தை கொடுப்போம். 6500 கோழிகளில் எப்படியும் 200 கோழிகள் நோயினாலோ, சரியான வளர்ச்சி இல்லாமலோ போய்விடும். இதுபோக மீதி உள்ள 6300 கோழிகளை வளர்த்து கொடுத்து விடுவோம். எப்படியும் 12 டன் கோழிகளைக் கொடுப்போம். ஒரு கிலோவிற்கு எங்களுக்கு ரூ.8 கிடைக்கும். 12 டன்னில் ரூ.96 ஆயிரம் கிடைக்கும். இதில் 40 நாட்களில் கோழிகளை வளர்த்து கொடுப்பதற்கு ஆட்கூலி, மின்சாரக் கட்டணம் என ரூ.30 ஆயிரம் செலவு ஆகும். அதுபோக ரூ.66 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது’’ என்கிறார்.
தொடர்புக்கு:
அர்ஜூனன்: 96260 38869.
கோழிகளுக்கு அவ்வப்போது வயிற்றுப் பிரச்சனைகள் வரும். தீவனத்தை அப்படியே மலமாக கழியும். இதனை சரி செய்ய கோழிகளுக்கு கொய்யா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து கொடுக்கலாம். இவ்வாறு கொடுக்கும்போது அவை எடை இழைக்கக்கூடும். அதனால் ஒரே ஒரு முறை இந்த கொய்யா இலை தண்ணீரைக் கொடுத்தால் போதும்.
சில கோழிகளுக்கு வயிற்றில் அஜீரணக் கோளாறு காரணமாக காயங்கள் ஏற்படும். இதனை சரி செய்ய கல்யாண முருங்கை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஒரு இரவு முழுவதும் ஆற வைத்து கோழிகளுக்கு கொடுக்கலாம். கொதிக்க வைத்த 2 லிட்டர் கலவையை 300 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
The post கறிக்கோழி வளர்ப்பில் கலக்கலான வருமானம்! appeared first on Dinakaran.