கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வறுமையை குறைத்து வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் சுய உதவிக்குழுக்களில் இணைந்த பெண்களுக்கு பல்வேறு விதமான கைவினைப்பொருட்கள் தயாரித்தல், உணவு பதப்படுத்துதல், காளான் வளர்ப்பு குறித்த பயிற்சிகள், சந்தைப்படுத்தல், அச்சகம், நர்ஸரி உள்ளிட்ட தொழில்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. பயிற்சிகள் முடிந்தபின் அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு சுழல் நிதி, சமூக முதலீட்டு நிதி, நலிவு குறைப்பு நிதி, கூட்டமைப்பு ஊக்க நிதி, வாழ்வாதார நிதி, பண்ணைசார் திட்ட நிதி, வட்டார வணிக வள மைய நிதி மற்றும் பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்ட நிதி என பல்வேறு வகையான நிதியுதவிகள் தமிழ்நாடு அரசின் மூலம் அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள திருப்பதி சாரம் திருவாழ்மார்பன் சுயஉதவிக்குழு, சக்திகுழு ஆகிய குழுவை சேர்ந்த பெண்கள் சுயதொழிலாக காளான் வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு மகளிர் திட்டம் மூலம் பயிற்சி பெற்று வெற்றிகரமாக காளான் வளர்ப்பை செய்து வருகின்றனர். வரும் காலங்களில் காளான் வளர்ப்பை பெரிதுபடுத்த இருப்பதாக சுயஉதவிக்குழு பெண்கள் கூறியுள்ளனர். இது குறித்து காளான் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சுயஉதவிக்குழு பெண்களில் ஒருவரான கிருஷ்ணவேணி பேசும்போது, ‘‘கடந்த பல வருடங்களாக மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இணைந்து செயல்பட்டு வருகிறேன். ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்புக் கூட்டங்களில் கலந்து கொண்ட போது தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள் தமிழ்நாடு அரசு சுய உதவிக்குழு பெண்களின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் பயிற்சிகள் மற்றும் நிதியுதவி செய்து வருவதாகவும், அதற்கான விருப்பமுள்ளவர்கள் ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்பின் வழியாக வட்டார அளவில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு தெரிவித்தார்கள்.
அதனடிப்படையில் நானும் எனது ஊரைச்சேர்ந்த சத்யா, சுபா, லட்சுமி நாங்கள் நால்வரும் காளான் வளர்ப்புத் தொழிலில் ஈடுபட பயிற்சி மற்றும் நிதியுதவி அளிக்குமாறு பூதப்பாண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பித்தோம். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வழிகாட்டுதலில் காளான் வளர்ப்பு தொடர்பாக ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. பயிற்சியில் காளான் வளர்ப்பது எப்படி? காளான் வளர்ப்புக் கூடாரம் அமைப்பது, எப்போதும் ஒரே சீரான வெப்பநிலையை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்? நோய்த் தொற்று எப்படி ஏற்படும்? முன்னெச்சரிக்கை மற்றும் விளைச்சல் பாதிக்கப்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி தெரிந்து கொண்டோம்.மேலும் காளான் விதை உற்பத்தி எப்படி செய்யவேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டோம். பயிற்சியினை தொடர்ந்து தொழில் செய்வதற்கான இடம் மற்றும் நிதியுதவி கேட்ட போது ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பண்ணை சார் தொகுப்புத் திட்டத்தின் கீழ் காளான் வளர்ப்பு அலகு அமைத்திட ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்தார்கள்.
தற்போது திருப்பதிசாரம் ஊராட்சி கிராம பொதுசேவை மையத்தின் ஒரு பகுதியில் உற்பத்திக்கான கட்டமைப்பை ஏற்படுத்தி காளான் உற்பத்தி செய்து வருகிறோம். ஒரு சுழற்சிக்கு 45 பைகள் வீதம் காளான் உற்பத்தி செய்து வருகிறோம். பை ஒன்றுக்கு அதிகபட்சம் ஒன்றரை கிலோ வீதம் விளைச்சல் கிடைக்கிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.250 வீதம் விற்பனை செய்கிறோம். உள்ளூரில் விற்பனை செய்து வருகிறோம். சுழற்சி ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரம் வரை கிடைக்கிறது. வீட்டுவேலை மற்றும் இதர வேலைகளோடு இது ஒரு பகுதிநேர வருமானம் கிடைக்கிறது.மேலும் அடுத்த சுழற்சிக்கு விதை, வைக்கோல் போன்ற பொருட்கள் வாங்குவதற்கு ரூ.2 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். மீதமுள்ள தொகையை நாங்கள் நான்கு பேரும் பிரித்துக்கொள்கிறோம். மகளிர் திட்ட இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் நாகப்பிரியா, மேலாளர் கீதா ஆகியோர் எங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் உதவிகள் செய்து வருகின்றனர். வீட்டில் இருந்தபடி சுயத்தொழில் ஒன்றை செய்துவருவது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் கிருஷ்ணவேணி.
தொடர்புக்கு:
கிருஷ்ணவேணி. 75300 75588.
காளான் வளர்க்க முக்கியமாக வைக்கோல் தேவையாக உள்ளது. வைக்கோலை நீரில் நனைத்து சிறிது காயப்போட்டு 70 சதவீதம் ஈரப்பதத்துடன், பாலித்தீன் கவரில் வைக்கோலை பந்துபோல் சுருட்டி வைக்க வேண்டும். அதன்மேல் காளான் விதை, அதன்மேல் வைக்கோல், அதன்மேல் காளான் விதை என வைத்து பாலித்தீன் கவர் வாய்ப்பகுதியை இறுக்கமாக கட்டிவிட வேண்டும். பின்பு இருட்டு அறையில் அந்த பையை தொங்கவிட்டு, காலை, மாலை நேரத்தில் காளான் விதைப்பையில் தண்ணீர் தெளிக்க வேண்டும். இப்படி செய்யும் போது 22வது நாளில் அந்த பையில் இருந்து காளான் பூக்க தொடங்கும். பூ விரிந்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். 22 நாட்களில் இருந்து 45 நாட்கள் வரை காளான் நமக்குக் கிடைக்கும். அதன்பிறகு அந்த பைகளை அகற்றிவிட்டு புதிதாக பைகளை அமைக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணவேணி.
The post சுய உதவிக்குழுக்களின் மூலம் காளான் வளர்ப்பு… appeared first on Dinakaran.