நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; குமரி முழுவதும் 800 போலீஸ் பாதுகாப்பு: கடலோர கிராமங்களில் உற்சாகம்

4 hours ago 3


நாகர்கோவில்: கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குமரி மாவட்ட கடலோர கிராமங்களும் களை கட்டி உள்ளன. விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. மாவட்டம் முழுவதும் சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் பிறப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம்தேதி, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை மறுதினம் (25ம்தேதி) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன. கடந்த ஒரு வாரமாகவே மாவட்டம் முழுவதும் உற்சாகத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. கிறிஸ்தவர்களின் வீடுகள், தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள், ஸ்டார்கள், அலங்கார மின் விளக்குகள் செய்யப்பட்டு உள்ளன.

கிறிஸ்து பிறப்பு பாடல்களை பாடியவாறு பாடகர் குழுவினர் பங்கேற்கும் கேரல் ரவுண்ட்ஸ் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. கிறிஸ்துமசையொட்டி வர்த்தக நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாகர்கோவில், மார்த்தாண்டம், தக்கலை, அருமனை, குளச்சல், களியக்காவிளை, கன்னியாகுமரி உள்பட மாவட்டம் முழுவதும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன. ஜவுளி கடைகளில் விற்பனை சூடு பிடித்து உள்ளன. மாலை வேளைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றன. பேக்கரி கடைகளில் விதவிதமான கேக் வைகளின் ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. கிறிஸ்துமஸ் என்றாலே கேக் வகைகள் தான் முக்கியத்துவம் பெறுகின்றன. பல்வேறு விதமான கேக் வகைகள் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளுக்கும் ஆர்டரின் பெயரில் கேக் வகைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கருங்கல்லில் நேற்று நடந்த கிறிஸ்துமஸ் தாத்தா ஊர்வலத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கடலோர கிராமங்களிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை கட்டி உள்ளன. தேவாலயங்கள் அனைத்தும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பணி நிமித்தமாக வெளிநாடுகளில் உள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இதே போல் மீன் பிடிப்பதற்காக வளைகுடா நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்த மீனவர்களும் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளனர். இதனால் கடலோர கிராமங்கள் களை கட்டி உள்ளன. தேவாலயங்களில் நாளை இரவு முதல் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் தொடங்கும்.

நாளை மறுதினம் காலையிலும் கிறிஸ்துமஸ் பிரார்த்தனைகள் நடக்கும். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்துக்கு நாளை (24ம்தேதி) உள்ளூர் விடுமுறை ஆகும். கிறிஸ்துமசையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலோர பகுதிகளை கண்காணிக்கும் வகையில் நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி, மார்த்தாண்டம் ஆகிய 5 துணை போலீஸ் சரகங்கங்களை ஒருங்கிணைத்து எக்ஸ்ரே 1,2, 3, 4 ஆகிய சிறப்பு ரோந்து படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் 800 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கிறிஸ்துமசையொட்டி நாளை நள்ளிரவிலும் தேவாலயங்களுக்கு மக்கள் வருவார்கள் என்பதால் அந்தந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட எஸ்.பி., சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார்.

நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் முக்கிய சாலைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், பேக்கரிகளில் மக்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் வகையில் போலீசார் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக வெளியூர்களில் இருந்து அதிகம் பேர் பஸ், ரயில்களில் குமரி மாவட்டம் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் கார்களிலும் வருகிறார்கள். இதனால் காலை வேளையில் பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டமும் அதிகமாக உள்ளது.

நேற்று (ஞாயிறு) விடுமுறை தினம் என்பதால், கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. நாகர்கோவிலில் செம்மாங்குடி ரோடு, அவ்வை சண்முகம் சாலை, அலெக்சாந்திரா பிரஸ் ரோடு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பாலமோர் ரோடு, கேப் ரோடு, எம்.எஸ். ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகள், பேக்கரிகளில் மக்கள் அதிகளவில் குவிந்திருந்தனர். ஓட்டல்களிலும் நேற்று மாலை முதல் இரவு வரை கூட்டம் அதிகமாக இருந்தது.

The post நாளை மறுதினம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; குமரி முழுவதும் 800 போலீஸ் பாதுகாப்பு: கடலோர கிராமங்களில் உற்சாகம் appeared first on Dinakaran.

Read Entire Article