
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 587 ரன்களும், இங்கிலாந்து 407 ரன்களும் குவித்தன. 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 6 விக்கெட்டுக்கு 427 ரன்னில் 'டிக்ளேர்' செய்து 608 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 68.1 ஓவர்களில் 271 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியை பெற்றது. இங்கிலாந்து தரப்பில் ஜேமி சுமித் 88 ரன்கள் அடித்தார். வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.
கேப்டன்சி மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தி முதல் இன்னிங்சில் இரட்டை சதமும், 2-வது இன்னிங்சில் சதமும் அடித்த இந்திய கேப்டன் சுப்மன் கில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தபோது விராட் கோலி, ரோகித் சர்மா போல இந்திய அணியை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் சுப்மன் கில் தடுமாறுவதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் உசேன் விமர்சித்தார். இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு முதல் போட்டியில் விமர்சித்த நாசர் உசேனே சுப்மன் கில்லை பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஆக்ரோஷமாக இருப்பது முக்கியம் என்று நான் கருதவில்லை. தோல்வியை சந்திக்கும்போது கேப்டன் காணாமல் போய்விட்டார் என்று விமர்சிப்பதும், வெற்றி பெறும்போது சிறந்த கேப்டன் என்று பாராட்டுவதும் எளிது. முதல் போட்டியில் வர்ணனையாளர் அறையிலிருந்து பார்க்கும்போது அவருக்கு நிறைய வீரர்கள் உள்ளீடுகளைக் கொடுத்தார்கள். அதனால் யார் கேப்டன் பொறுப்பில் இருக்கிறார்? என்ற கேள்வி எழுந்தது.
ஆனால் 2-வது போட்டியில் கேமரா அடிக்கடி அவரை நோக்கிச் சென்றது, அவர் பீல்டர்களை சிறப்பாக நகர்த்தி தலைமைத் தாங்கினார். ரிஷப் பண்ட், ராகுல் உதவி செய்தாலும் அவர் அணியை முழுமையாக கட்டுப்படுத்தியது தெரிந்தது. அவர் எப்போதும் அமைதியாக இருக்கிறார். நீங்கள் அந்த நேர்காணலைக் கேட்டீர்கள். அவருக்கு மிகவும் குறைந்த இதயத் துடிப்பு உள்ளது.பொறுமையும் அமைதியும் கொண்ட அவர் விராட் கோலியை போன்று இருக்க போவதில்லை.
மொத்த இந்தியாவும் பார்க்கும் அணியை நீங்கள் அமைதியுடன் வழி நடத்துவதே சிறந்தது. அவர் நாம் செய்ய விரும்பாத சில நுட்பமான விஷயங்களைச் செய்தார். ஆகாஷ் தீப் இந்த முனையில் அழகாக பந்து வீசினார். அவரை அடுத்த நாள் காலையில் அவர் அந்தப் பக்கம் பவுலிங் செய்ய வைத்தார். அது வேலை செய்தது. எனவே இந்த ஆட்டத்தில் அவர் செய்த தந்திரோபாய விஷயங்கள் உண்மையில் வேலை செய்தன. தம்முடைய முதன்மை வேலையான பேட்டிங்கிலும் அவர் ரன்களை குவித்துள்ளார்" என்று கூறினார்.