![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/12/39083566-5-gill-shreyas-afp.webp)
அகமதாபாத்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடந்த முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய ரோகித் சர்மா 1 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து விராட் கோலி களம் இறங்கினார். விராட் - சுப்மன் கில் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது.
இதில் பார்ம் இன்றி தவித்த விராட் கோலி அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஸ்ரேயாஸ் ஐயர் களம் புகுந்தார். ஸ்ரேயாஸ் - சுப்மன் கில் இணை அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் துணை கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்த நிலையில் 112 ரன்னிலும், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்த நிலையில் 78 ரன்னிலும் அவுட் ஆகினர்.
தொடர்ந்து களம் புகுந்த ராகுல் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் ஹர்த்திக் பாண்ட்யா 17 ரன்னிலும், அக்சர் படேல் 13 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ராகுல் 29 பந்தில் 40 ரன் எடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 356 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 112 ரன் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 357 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து ஆட உள்ளது.