சுசீந்திரம், ஏப்.29: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை கோட்டாறு விநாயகர் கோயிலில் இருந்து பட்டாரியர் சமுதாய மக்கள் கொடி பட்டத்தை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சுசீந்திரம் ரதவீதிகளில் கொண்டு வந்து கோயிலை அடைந்தனர். இதையடுத்து கொடி பட்டத்ைத கோயில் மேலாளர் தரணிதரனிடம் வழங்கினர். நேற்று காலையில் திருமுறை பாராயணம் நடந்தது.
தொடர்ந்து கொடிமர பூஜைகள் செய்யப்பட்டு திருக்கொடியேற்றப்பட்டது. ஆதிஷேசன் திருக்கொடியை ஏற்றினார். இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணிக்கு விநாயகர் மூஷிக வாகனத்தில் திருவீதியுலா வரும் நிகழ்ச்சியும், 8 மணிக்கு பூங்கோயில் வாகனத்திலும், இரவு 9.30க்கு புஷ்பக விமான வாகனத்திலும் சுவாமி, அம்பாள் திருவீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து தினந்ேதாறும் சுவாமிகளுக்கு பல்வேறு பூஜைகள், வீதியுலா நடைபெறுகிறது.
10ம் நாள் இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகியோரை அமரசெய்து தெப்ப குளத்தை 3 முறை வலம் வரும் தெப்ப திருவிழா, நள்ளிரவு 12 மணிக்கு திரு ஆராட்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில்களின் இணை ஆணையர் பழனிக்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் தாணுமாலயன் சுவாமி கோயில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்து இருந்தனர்.
The post சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா; கொடியேற்றத்துடன் தொடங்கியது – பக்தர்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.